

சித்தூர்- தச்சூர் 6 வழிச் சாலைதிட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து,அத்திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட விளை நிலங்களுக்கான ஆவணங்களை, ஊத்துக்கோட்டை பகுதி விவசாயிகள் அதிகாரிகளிடம் கொடுக்க மறுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
பிற மாநிலங்களில் இருந்து எண்ணூர் காமராஜர் மற்றும் காட்டுப்பள்ளி தனியார் துறைமுகங்களுக்கு சரக்கு வாகனங்கள் வேகமாக வருவதற்காக, ‘பாரத்மாலா பரியோஜனா’ திட்டத்தின்கீழ் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ஆந்திர மாநிலம், சித்தூர் முதல், திருவள்ளூர் மாவட்டம், தச்சூர் வரை 126.550 கி.மீ. தொலைவுக்கு, பெங்களூரு- சென்னை அதிவேக நெடுஞ்சாலை (6 வழிச்சாலை) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆந்திராவில் 75 கி.மீ., தமிழகத்தில் பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி வட்டங்களில் 51 கி.மீ. தொலைவுக்கு அமைய உள்ள இச்சாலை என்.எச்.716பி என்று அழைக்கப்படுகிறது.
ரூ.3,197 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள இச்சாலைக்காக ஆந்திராவில் 2,186 ஏக்கர், தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் 889 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறு கையகப்படுத்தப்படும் பெரும்பகுதி நிலங்கள், 3 போகம் விளையும் விளை நிலங்கள் என்பதால் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் கையகப்படுத்தப்பட்டுள்ள விளைநிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்காக கடந்த 27-ம் தேதி முதல் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) குணசேகரன் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கிராமங்கள் வாரியாக நிலம் தொடர்பான ஆவணங்களை பெற்று வருகின்றனர்.
அவ்வகையில், ஊத்துக்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் நேற்று முதல் ஆவணங்களை பெற வருவாய்த் துறையினர் திட்டமிட்டனர்.
அதன்படி, பனப்பாக்கம் கிராமத்துக்கு ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று வருவாய்த் துறை அதிகாரிகள் தயாராக இருந்தனர்.
ஆனால், அங்கு வந்த 50-க்கும்மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், "தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இந்த சாலை திட்டம் உள்ளது. ஆகவே, விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று வழிகளில் சித்தூர்- தச்சூர் சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தனர்.
அதுமட்டுமல்லாமல், கையகப்படுத்தப்பட்ட தங்கள் நிலங்களுக்கான இழப்பீடு பெறுவதற்கு உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் தர மறுத்த விவசாயிகள், தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
மேலும், இத்திட்டத்துக்கு எதிராக வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.