

கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமான கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவிடும் காங்கிரஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸின் எதிர்கால செயல்திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த கூட்டத்தில் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தேசிய செயலாளர் சிரிவெல்ல பிரசாத், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:
தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்ற பிறகு, நபர் சார்ந்த அரசியலிருந்து விலகி கொள்கை சார்ந்த அரசியலை நோக்கி காங்கிரஸ் பயணித்து வருகிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் 9 இடங்களில் போட்டியிட்டு 8 தொகுதிகளிலும், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்டு 18 தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றது. இதன்மூலம் தமிழகத்தின் 3-வதுபெரிய கட்சியாக காங்கிரஸ் இடம்பெற்றிருப்பது பெரும் சாதனை. இதற்காக கே.எஸ்.அழகிரி, மேலிடப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி.
இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியினரும் சபதமாக ஏற்றுக்கொண்டு தமிழகத்தில் கட்சியை பலப்படுத்த வேண்டும். கடும் உழைப்பின் மூலமே காங்கிரஸை வலிமைமிக்க இயக்கமாக மாற்ற முடியும் என்பதை கட்சியினர் அனைவரும் உணர வேண்டும்.
திமுகவுக்கு வாக்களித்தவர்களும், எதிர்த்து வாக்களித்தவர்களும் பாராட்டும் வகையில் சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்துவது, தடுப்பூசி போடுவதில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்க வேண்டும், முக்கியப் பிரமுகர்களை பெகாசஸ் மென்பொருள் மூலம்உளவுபார்த்த மோடி அரசுக்குகண்டனம், கருத்துச் சுதந்திரத்துக்குஎதிரான உபா சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும், கடல் மீன்வள சட்டத் திருத்த மசோதாவை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், சமீபகாலமாக காங்கிரஸ் தலைவர்களின் நற்பெயரை சிதைக்கும் வகையிலும், கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாகவும் சமூக ஊடகங்களில் காங்கிரஸ் கட்சியினரே கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். எந்த அரசியல் கட்சியிலும் காணாத இந்த அநாகரிகப் போக்கு காங்கிரஸ் கட்சியில் இருப்பது வேதனை அளிக்கிறது. இத்தகைய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.