

கோயம்பேடு சந்தையில் உள்ள கடைகளுக்கான பராமரிப்புக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கோயம்பேடு காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன், கோயம்பேடு சந்தை முதன்மை நிர்வாக அதிகாரியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடைகளுக்கான உரிம கட்டணம், சொத்து வரி உள்ளிட்டவற்றை கடைக்காரர்கள் செலுத்தி வருகின்றனர். அதனால் சந்தையில் உள்ள கடைகளுக்கான பராமரிப்பு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். சந்தையில் உள்ள அனைத்து கழிப்பறைகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அவற்றை இலவசமாக உபயோகிக்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். சந்தை வளாகத்தில் பிளாஸ்டிக் உபயோகத்தை அனுமதிக்கக் கூடாது.
சந்தையில் குடிநீர் வசதியை ஏற்படுத்த வேண்டும். சந்தைக்கு வரும் சரக்கு வாகனங்களை எடைபோட தானியங்கி எடைமேடை அமைக்க வேண்டும். பூந்தமல்லி வழியாக சந்தைக்கு வரும் சாலை மூடப்பட்டுள்ளதால் மாற்றுப் பாதை அமைத்துத் தர வேண்டும். சந்தையில் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும். சந்தையில் உள்ள பகுதிகளில் சூரியஒளி மின்சாரத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.