

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுபொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் நேற்று தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறை செயலர் சந்தீப் சக்சேனாவிடம் மனு அளித்தனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:
தமிழகத்தில் சமீபகாலமாக பாசன விதிமுறைகள் மீறப்படுகின்றன. இதனால் நீர்ப்பாசன முறைகளில் மிகப் பெரிய பின்னடைவு ஏற்படும். எனவே, வனத்துறையைப் போன்று நீர்ப்பாசனத் துறைக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும்.
தஞ்சையில் கர்நாடக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக தமிழக பாஜக தலைவர் அறிவித்துள்ளார். இந்த பிரச்சினைக்கு காரணமே பிரதமர் அலுவலகம் 2018-ல் கர்நாடகா அணை கட்டுவதற்கான விரிவான திட்டஅறிக்கைக்கு அனுமதியளித்ததுதான். அதைக் கொண்டுதான் புதிய அணை கட்ட ரூ.9000 கோடியில் திட்டமிட்டு, காவிரி மேலாண்மை ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளது.
எனவே, பிரதமரை கண்டித்துதான் தமிழக பாஜக தலைவர் போராட்டம் நடத்த வேண்டும். பிரதமர் மேகேதாட்டு திட்டத்துக்கு அனுமதி தரமாட்டார் என்று கூறுகிறார். அன்று அனுமதி கொடுத்ததால் தான், கர்நாடகா சட்டப்பேரவையில் நிதி ஒதுக்குகிறார்கள். எனவே, இதுகுறித்து பாஜக விளக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.