விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்; தேர்தல் நடத்தும் அலுவலரை இன்றைக்குள் நியமிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்; தேர்தல் நடத்தும் அலுவலரை இன்றைக்குள் நியமிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
Updated on
1 min read

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை இன்றைக்குள் (ஜூலை 31) நியமிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரகஉள்ளாட்சித் தேர்தல்களில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையச் செயலர் எ.சுந்தரவல்லி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கு, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல்நடத்தும் அலுவலர்களை நியமிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்படுவோர், ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும், எந்தக் கட்சியையும் சாராதவராக இருக்க வேண்டும். ஊரக வளர்ச்சி, வருவாய், கூட்டுறவு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்களை முன்னுரிமை அடிப்படையில் நியமிக்க வேண்டும்.

கிராம ஊராட்சித் தலைவர் தேர்தலுக்கு, தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேர்தல் நடத்தும் அலுவலராகவும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டாட்சியர் ஆகியோரை துணை தேர்தல் நடத்தும் அலுவலராகவும் நியமிக்க வேண்டும்.

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல்களுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் துணை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகமாக, தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்ட விவரத்தை மாவட்டஆட்சியர்கள் ஜூலை 31-ம் தேதிக்குள் (இன்று) மாநில தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in