

திண்டுக்கல் வனப்பகுதியில் திருடி, மதுரையில் விற்க முயன்ற சுமார் ரூ.8 லட்சம் மதிப்புள்ள கல்பாசி இலைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
வனப்பகுதி மற்றும் ஈரம் சார்ந்த பாறைகளில் இலைகள் போன்று படர்ந்துள்ள கல்பாசி (கல்பாசம்) என்ற தாவரம் மருத்துவ தேவைக்கும், உணவுப் பொருட்களில் வாசனைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து கல்பாசி இலையை திருடி மதுரையில் விற்க சிலர் திட்டமிடுவதாக வனத்துறை யினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மதுரை வனச்சரகர் (ரேஞ்சர்) சரவணக் குமார், வனவர் லோகநாதன் உள்ளிட்டோர் விளக்குத்தூண் பகுதியில் நேற்று சந்தேகத்துக்கு இடமான வேன் ஒன்றை ஆய்வு செய்தனர். வேனில் இருந்த 49 மூட்டைகளில் 44 மூட்டைகளில் கல் பாசியும், 5 மூட்டைகளில் சீயக்காய்களும் இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக வேன் ஓட்டுநரான கொடைக்கானல் சதீஸ்வரன் (35) என்பவரிடம் நடத் திய விசாரணையில், திண்டுக் கல் மலைப்பகுதியில் இருந்து கல்பாசி இலைகளை சேகரித்து, மதுரை மார்க்கெட்டில் விற்க கொண்டு வந்தது தெரிந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் வரை இருக்கலாம் என வனத் துறையினர் தெரிவித்தனர்.