

பதவி உயர்வு கிடைக்காமல் வருத்தத்தில் இருந்த ஐபிஎஸ் அதிகாரி அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸில் கூடுதல் எஸ்பியாக இருந்தவர் என்.ஹரிஷ்(33). கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர். எழும்பூர் போலீஸ் அதிகாரிகள் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். நேற்று காலை 11 மணி கடந்த பின்னரும் இவரது அறை திறக்கப்படவில்லை. அவரது கார் ஓட்டுநர் வந்து செல்போனில் தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த விடுதி பணியாளர்கள் எழும்பூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்த பின்னர் மாற்று சாவி மூலம் கதவை திறந்து பார்த்தபோது, படுக்கையில் ஹரிஷ் இறந்துகிடந்தார். அருகில் மது பாட்டில்களும் இருந்தன. கூடுதல் ஆணையர் சங்கர், இணை ஆணையர் மனோகரன், துணை ஆணையர் பெருமாள் உட்பட பல அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஹரிஷ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பதவி உயர்வு கிடைக்கவில்லை
ஹரிஷ், 2009-ம் ஆண்டு பயிற்சி முடித்து தூத்துக்குடியில் கூடுதல் எஸ்பியாக பணியில் சேர்ந்து, பின்னர் மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதி குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையராக பணியாற்றி இருக்கிறார். 2009 ம் ஆண்டில் இவருடன் பணியில் சேர்ந்த மற்ற போலீஸ் அதிகாரிகள் அனைவரும் 2013-ம் ஆண்டிலேயே எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றுவிட்டனர். ஆனால், ஹரிஷுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
ஐபிஎஸ் அதிகாரிகள் எந்த மாநிலத்தில் பணிபுரிகிறார்களோ அந்த மாநில மொழியை அடுத்த 2 ஆண்டுகளில் படித்து ஒரு தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பது விதி. ஆனால் ஹரிஷ் தமிழ் மொழி தேர்வில் வெற்றி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், டிஜிபி அந்தஸ்தில் இருந்து தற்போது ஓய்வு பெற்றிருக்கும் ஒரு அதிகாரிக்கு ஏற்றார்போல சில வழக்குகளை முடித்துக்கொடுக்காததால் ஹரிஷ் பதவி உயர்வுக்கு பல தடைகளை அவர் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. ஹரிஷுக்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைத்த நிலையில், ஜூனியர்களுக்கு கீழே ஹரிஷ் பணிபுரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சென்னை லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஹரிஷ் மாற்றப்பட்டார். பதவி உயர்வு கிடைக்காமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர் திடீரென இறந்துவிட்டார்.
ஹரிஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அதிக மது அருந்தியதால் உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்தாரா என்பது குறித்து பிரேதப் பரிசோதனை முடிவு வந்த பின்னரே தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை செய்தாரா?
பதவி உயர்வு கிடைக்காத விரக்தியில் ஹரிஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஒரு கடிதமும் அவர் எழுதி வைத்திருந்தார். போலீஸ் அதிகாரிகள் அவற்றை மறைத்து, மது அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இயற்கை மரணம் அடைந்ததுபோல வழக்கை மாற்ற முயற்சி செய்கின்றனர். ஏற்கெனவே தற்கொலை செய்த போலீஸ் அதிகாரி விஷ்ணுப்ரியா சம்பவத்தைப்போல இதுவும் பரபரப்பாகி விடக்கூடாது என்பதற்காக அனைத்து உண்மைகளையும் போலீஸார் மறைத்துவிட்டதாக ஹரிஷுக்கு வேண்டிய சிலர் தெரிவித்துள்ளனர்.
2-வது சம்பவம்
ஐபிஎஸ் அதிகாரி ஹரிஷின் தந்தை நாகராஜ், உறவினர் அனில் ஆகியோர் கர்நாடகத்திலிருந்து நேற்று மாலை சென்னை வந்தனர். அவர்கள் ஹரிஷின் உடலை பார்த்து கதறி அழுதனர். மன உளைச்சல் பிரச்சினைகளுக்காக ஹரிஷ் சிகிச்சை எடுத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
எழும்பூரில் உள்ள போலீஸ் அதிகாரிகள் தங்கும் விடுதியில் ஓராண்டுக்கு முன்பு இதே விடுதியில் தங்கியிருந்த ஒரு ஐபிஎஸ் அதிகாரி மது அருந்தி அறையில் இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.