

மாமல்லபுரம் கடற்கரையில் ஸ்தலசயன பெருமாள் மஹோதய அமாவாசை தீர்த்தவாரி உற்சவம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று நடை பெற்றது. அதேபோல் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் தெப் பக்குளத்தில் குவிந்த ஏராளமான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
தை அமாவாசை நாளில் 30 ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் மஹோதய தீர்த்தவாரி வைபவம் பிரசித்தி பெற்ற நிகழ்வாகும். மேலும் அன்றைய தினத்தில் முன் னோர்களுக்கு தர்ப்பணம் செய் வது நிறைந்த பலனைத் தரும் என்பது ஐதீகம். இதன்படி நேற்று பல்வேறு நீர்நிலைகள், கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
இதன் ஒருபகுதியாக மாமல்ல புரத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் ஸ்தலசயன பெரு மாள் கோயிலில் 30 ஆண்டுக்குப் பிறகு மஹோதய தீர்த்தவாரி உற் சவம் நேற்று அதிகாலை நடை பெற்றது. மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத் தில் உற்tசவர் பெருமாள் ராஜ வீதிகளில் உலா வந்தார். பின்னர், கடற்கரை கோயில் அருகே ஸ்தலச யன பெருமாள், ஆதிவராக பெரு மாள் கருடவாகனத்தில் எழுந்தருளி னர். பின்னர், கடற்கரையில் அமைக்கப்பட்டி ருந்த பந்தலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆதாரனைகள் நடை பெற்றன.
அதன் பின், சக்கரத்தாழ்வார் கடலில் இறங்கினார். அப்போது, ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடினர். மேலும், கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டனர். பின்னர், சிறப்பு ஆராதனைகளுடன் மீண்டும் ஸ்தலசயன பெருமாள் கோயிலை வந்தடைந்தார். 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை மஹோதய தீர்த்தவாரி நடைபெறும் என்பதால், இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணிகளில் ஏராளமான போலீஸார் ஈடுபட்டனர்.
மேலும், நேற்றைய தினம் சர்வ தை அமாவாசை என்பதால் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங் களைச் சேர்ந்த ஆயிரக்கணக் கானோர் திருக்குளம் மற்றும் மாமல்லபுரம் கடற்கரையில் முன் னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கடலில் புனித நீராடி பெருமாளை வழிபட்டனர்.
திருவள்ளூர்
அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக காக்களூர் ஏரி நீரால் 48 ஆண்டுகளுக்குப் பிறகு வீரராகவபெருமாள் கோயில் தெப்பக்குளம் தற்போது முழு மையாக நிரம்பி உள்ளது. இக் குளத்தில் நேற்று அதிகாலை முதலே பொதுமக்கள் குவியத் தொடங்கினர். பின்னர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
இதில் திருவள்ளூர், ஊத்துக் கோட்டை, பொன்னேரி, திருத்தணி உட்பட மாவட்டம் முழுவதும் இருந்தும் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஆந்திரப் பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் தெப்பக்குளத்தில் நீராடி வீரராகவப் பெருமாளை வழி பட்டனர்.
மேலும், வீரராகவ பெருமாள் கோயிலில் கடந்த 3-ம் தேதி முதல் நடந்து வரும் தை பிரமோற்சவ விழாவில், 6-ம் நாளான நேற்று தை அமாவாசையை முன்னிட்டு, காலை 5 மணி முதல், பகல் 12 மணி வரை ரத்னாங்கி சேவை நிகழ்வும், மாலை 3 மணிக்கு சூர்ணாபிஷேகம் நிகழ்வும் நடந்தது. தொடர்ந்து, மாலையில் வேணுகோபாலன் திருக்கோலத்தில் வெள்ளிச் சப்பரத்திலும், இரவு யானை வாக னத்திலும் வீரராகவபெருமாள் திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.