

தி.மலை – சென்னை இடையே யான ரயில் சேவை மீண்டும் புறக் கணிக்கப்பட்டுள்ளதால் ரயில்வே துறைக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் – காட்பாடிஇடையே மீட்டர்கேஜ் ரயில் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக, தி.மலையில் இருந்து விழுப்புரம் வழியாக தாம்பரத்துக்கு இயக்கப்பட்ட பாசஞ்சர் ரயில்சேவை, கடந்த 2007-ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. அகல ரயில் பாதை அமைக்கப்பட்டதும், பாசஞ்சர் ரயில் மீண்டும் இயக்கப் படும் என கூறப்பட்டது. அகல ரயில் பாதை பணி முடிக்கப்பட்டு, பிற வழித்தடங்களில் இருந்து தி.மலை வழியாக ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 14 ஆண்டு களுக்கு முன்பு நிறுத்தப்பட்ட திருவண்ணாமலை – தாம்பரம் பாசஞ்சர் ரயில் மட்டும் மீண்டும் இயக்கப்படவில்லை.
இதையடுத்து, திருவண்ணா மலையில் இருந்து சென்னைக்கு மீண்டும் ரயில் சேவை தொடங்க வேண்டும் என வணிகர்கள், பக்தர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் வலியுறுத்தினர். இதற்காக, பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. இது தொடர்பாக, தென்னக ரயில்வே, இந்திய ரயில்வே வாரியத்துக்கு கோரிக்கை மனுவை அனுப்பினர். மக்களின் கோரிக்கையை ஆதரித்து, ரயில்வேஅமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சர்களை நேரில் சந்தித்து மக்கள் பிரதிநிதிகளும் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையில், பவுர்ணமி கிரிவலத்துக்காக சென்னை கடற்கரை – வேலூர் இடையே இயக்கப்பட்ட முன்பதிவு இல்லாத விரைவு ரயில், தி.மலை வரை இயக் கப்பட்டது. இந்த ரயிலை தினசரி இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, சென்னை கடற்கரை – வேலூர் இடையே இயக்கப்பட்டு வரும் ரயிலை, தி.மலை வரை இயக்கலாம் என இந்திய ரயில்வே வாரியத்துக்கு தென்னக ரயில்வே கடந்தாண்டு டிசம்பர் பரிந்துரை செய்தது. இதன்மூலம் சென்னை – தி.மலை ரயில் சேவை என்ற மக்களின் கனவு, விரைவில் நனவாகும் என எதிர்பார்க்கப் பட்டது.
ரயில் பயணிகளுக்கு ஏமாற்றம்
இந்நிலையில் மக்களின் கனவு மீண்டும் கானல் நீரானது. வேலூர் – சென்னை கடற்கரை இடையே முன்பதிவு இல்லாத விரைவு ரயிலை மீண்டும் இயக்கு வதற்கான கால அட்டவணையை தென்னக ரயில்வே நேற்று வெளி யிட்டுள்ளது. வேலூர் – சென்னை கடற்கரை இடையேயான சிறப்பு விரைவு ரயில் சேவை, ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் மீண்டும் தொடங் கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள் ளது. புதிய அட்டவணைபடி, சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் வழியாக தி.மலை வரை இயக்கப்படும் என்ற அறிவிப்பு இடம்பெறவில்லை. இந்தஅறிவிப்பானது, தி.மலை – சென்னை இடையே ரயில் பயணத்தை எதிர்பார்த்து காத்திருந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
போராட்டம் நடத்தப்படும்
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “தி.மலை – சென்னை இடையே ரயில் சேவையை தொடங்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். எங்களது கோரிக்கைக்கு மதிப்பு கொடுத்து, மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரையும் முயற்சி மேற்கொண்டார். அதன் எதிரொலியாக, சென்னை கடற்கரை – வேலூர் இடையே இயக்கப்பட்ட ரயிலை, திருவண்ணாமலை வரைநீட்டிக்கலாம் என தென்னக ரயில்வேயும் கடந்தாண்டு பரிந்துரை செய்தது. அப்படி இருந்தும், இன்று (நேற்று) வெளியிடப் பட்டுள்ள புதிய அட்டவணைப்படி, தி.மலை – சென்னை இடையே யான ரயில் சேவை புறக் கணிக்கப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சகத்தின், இந்த நடவடிக் கையை வன்மையாக கண்டிக் கிறோம். தி.மலை – சென்னை இடையே ரயில் சேவையை தொடங்கவில்லை என்றால், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்” என எச்சரித்துள்ளனர்.