தமிழக காவல் துறையினருக்கு வார விடுப்பு: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

தமிழக காவல் துறையினருக்கு வார விடுப்பு: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு
Updated on
1 min read

காவலர்கள்‌ தங்கள்‌ உடல்‌ நலனைப் பேணிக் கொள்ள ஏதுவாகவும்‌, காவலர்கள்‌ தங்களது குடும்பத்தாருடன்‌ போதிய நேரம் ‌செலவிடுவதற்கும்‌, வாரத்தில்‌ ஒரு நாள்‌ வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும் எனத் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

காவலர்களுக்கு வார விடுப்பு அளிக்கப்பட வேண்டும் என தமிழக காவல்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. அதுவும் கரோனா நெருக்கடி வந்த பின்னர் காவலர்களின் பணிச்சுமை பல மடங்கு கூடியிருக்கிறது. மாதக்கணக்கில் விடுப்பில்லாமல் பணியாற்றும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காவலர்களுக்கு வாரத்தில்‌ ஒரு நாள்‌ வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

1. காவலர்கள்‌ தங்கள்‌ உடல்‌ நலனைப் பேணிக் கொள்ள ஏதுவாகவும்‌, காவலர்கள்‌ தங்களது குடும்பத்தாருடன்‌ போதிய நேரம் ‌செலவிடுவதற்கும்‌, வாரத்தில்‌ ஒரு நாள்‌ வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும்.

2. வார ஓய்வு தேவைப்படவில்லை எனத் தெரிவிக்கும்‌ காவலர்களுக்கும்‌, ஓய்வு தினத்தன்று பணியில்‌ இருக்கும்‌ காவலர்களுக்கும்‌ மிகை நேர ஊதியம்‌ வழங்கப்படல்‌ வேண்டும்‌.

3. காவலர்களின்‌ பிறந்த நாள்‌ மற்றும்‌ திருமண நாட்களில்‌ அவர்களது குடும்பத்தாருடன்‌ கொண்டாட ஏதுவாக அந்தந்த நாட்களில்‌ அவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும்‌.

4. தமிழக காவல்‌ துறையின்‌ சார்பாக பிறந்த நாள்‌ மற்றும்‌ திருமண நாள்‌ வாழ்த்துச்‌ செய்தி, மாவட்ட மாநகரக் காவல்‌ கட்டுப்பாட்டு அறையின்‌ வானொலி மூலமாக சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட அறிவுரைகளை அனைத்து மாநகர காவல்‌ ஆணையாளர்கள்‌ மற்றும்‌ மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்களும்‌ தவறாமல்‌ செயல்படுத்துமாறு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in