சர்ச்சைப் பேச்சு விவகாரத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் ஜாமீன் மனு தள்ளுபடி

சர்ச்சைப் பேச்சு விவகாரத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் ஜாமீன் மனு தள்ளுபடி
Updated on
1 min read

பிரதமர் மோடி, திமுகவின் வெற்றி, தமிழக அமைச்சர்கள், மற்றும் இந்து மதம் குறித்து சர்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, கிறிஸ்தவ இயக்கச் செயலாளர் ஸ்டீபன் ஆகியோரின் ஜாமீன் மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கடந்த 18 ஆம் தேதி கிறிஸ்தவ இயக்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தமிழகத்தில் திமுக பெற்ற வெற்றி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். மேலும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, நாகர்கோவில் எம்எல்., எம்.ஆர்.காந்தி, மற்றும் தமிழக அமைச்சர்கள் குறித்தும் கடும் விமர்சனம் செய்து பேசினார்.

இந்த சர்ச்சைப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக கடும் விமர்சனத்துக்குள்ளானது. தமிழகத்தில் மத ரீதியிலான அதிர்வலையையும் ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பாக அருமனை காவல் நிலையத்தில் கடந்த 20 ஆம் தேதி பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் ஆகியோர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இருவரையும் கைது செய்ய போலீஸார் தேடிய நிலையில் தலைமறைவாயினர். சென்னைக்கு காரில் தப்பிச் செல்ல முயன்ற ஜார்ஜ் பொன்னையாவை கடந்த 24 ஆம் தேதி மதுரையில் வைத்து போலீஸார் கைது செய்து குழித்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் தலைமறைவான ஸ்டீபன் 25 ஆம் தேதி கேரளா தப்பிச் செல்ல முயன்றபோது அவரை போலீஸார் கைது செய்து குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அவர் தூத்துக்குடி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, ஸ்டீபன் ஆகிய இருவரும் ஜாமீன் கேட்டு குழித்துறை நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தனர்.

இருவரது ஜாமீன் மனுவையும் மாஜிஸ்திரேட்டு ஜெயகாளீஸ்வரி தள்ளுபடி செய்தார். இந்நிலையில் ஸ்டீபன் மீது ஏற்கெனவே இருந்த 3 வழக்குகள் தொடர்பாக குழித்துறை, மற்றும் பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் அவரை போலீஸார் இன்று ஆஜர்படுத்திவிட்டு தூத்துக்குடி சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in