

ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் உட்பட 11 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடப்புக் கல்வியாண்டில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வாசுதேவா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல் உட்பட 11 மாவட்டங்களில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளை, 2020- 21ஆம் ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வில் சேர்க்க உத்தரவிட வேண்டும்''.
இந்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு:
''புதிதாகத் தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரி கட்டிடங்கள், ஆய்வகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைத் தமிழக அரசு விரைவில் செய்து முடிக்க வேண்டும்.
அதன் பிறகே தேசிய மருத்துவக் கல்விக் கழகத்தின் அனுமதி பெற முடியும். 2021- 22ஆம் கல்வி ஆண்டில் புதிய 11 மருத்துக் கல்லூரிகளில் தலா 150 மாணவர்கள் வீதம் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்''.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.