Published : 30 Jul 2021 05:53 PM
Last Updated : 30 Jul 2021 05:53 PM

தானே புயலில் சேதமடைந்த மாங்குரோவ் காடுகள்; மீண்டும் உருவாக்கக் கோரி வழக்கு: மத்திய-மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை

தானே புயலிலும், 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திலும் கடலூரில் சேதமடைந்த மாங்குரோவ் காடுகளை மீண்டும் உருவாக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், பிச்சாவரத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள சொதிகுப்பம் கிராமத்தில், உப்பனாறு கரையில் 15 கி.மீ. தூரத்துக்கு மாங்குரோவ் காடுகளை ஆலமரம் எனும் தொண்டு நிறுவனம் அமைத்தது.

தானே புயலிலும், 2015ஆம் ஆண்டு வெள்ளத்திலும் இந்த மாங்குரோவ் காடுகள் அழிந்துவிட்டதாகவும், அவற்றை மீண்டும் உருவாக்க உத்தரவிடக் கோரியும், ஆலமரம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனச் செயலாளர் அர்ஜுனன் இளையராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த மனுவில், “2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் மாங்குரோவ் காடுகள் சேதமடைந்துள்ளதாக நேரில் ஆய்வு செய்த மத்தியக் குழு அறிக்கை அளித்ததாகவும், அதன்படி, மீண்டும் இந்தக் காடுகளை உருவாக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியும் எந்தப் பணியும் நடைபெறவில்லை என்பதால், மீண்டும் அப்பகுதியில் மாங்குரோவ் காடுகளை உருவாக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 10 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசின் குழு மதிப்பீடு செய்துள்ளதாகவும், மாங்குரோவ் காடுகளை மீண்டும் வளர்க்காவிட்டால், சுற்றுச்சூழலுக்கும், பறவைகளுக்கும் ஆபத்து ஏற்படும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதுகுறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாகக் கூறியதையடுத்து, மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x