Last Updated : 30 Jul, 2021 05:24 PM

 

Published : 30 Jul 2021 05:24 PM
Last Updated : 30 Jul 2021 05:24 PM

தமிழகத்தில் அனைத்து சுற்றுலா தலங்களையும் படிப்படியாக பயன்பாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை: அமைச்சர் மதிவேந்தன் தகவல்

நாகர்கோவில்

தமிழகத்தில் கரோனா 3-வது அலையின் தாக்கத்தைக் கவனத்தில் கொண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு படிப்படியாக அனைத்து சுற்றுலா தலங்களையும் பயன்பாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கன்னியாகுமரியில் சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தெரிவித்தார்.

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் இன்று கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் கன்னியாகுமரி ஒலி, ஒளி கண்காட்சி அரங்கு, சூரிய உதய காட்சி கோபுரம், முகிலன்குடியிருப்பு கடற்கரை, மணக்குடியில் படகு சவாரிக்கான தளம் அமைக்கும் இடம், முட்டம் கடற்கரை. சிற்றாறு அணை, பேச்சிப்பாறை அணைப்பகுதி ஆகிய இடங்களில் எக்கோ சுற்றுலா தளம் அமைப்பதற்கான இடங்களையும், திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம் ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது செய்தியாளர்களுக்கு அமைச்சர் மா.மதிவேந்தன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

கன்னியாகுமரியில் கடல்நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடந்த ஆட்சியில் பராமரிப்பு இன்றியும், 4 ஆண்டுகளை கடந்த பின்பும் ரசாயன கலவை பூசப்படாமலும் உள்ளது. இதனால் தற்போது ரசாயன கலவை பூசுவதற்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு பணிகள் விரைவில் துவங்கப்படும்.

மேலும் உலகப் புகழ்பெற்ற இந்த திருவள்ளுவர் சிலையினை இரவிலும் சுற்றுலாப் பயணிகள் மின்னொளியில் கண்டு களிக்கும் வகையில் சிலையின் முகப்பில் நவீன தொழில்நுட்பத்தில் ஒலி, ஒளியுடன் கூடிய லேசர் லைட் அமைக்கப்படும். முக்கடல் சங்கமத்தில் கேபிள்கார் வசதி ஏற்படுத்தும் திட்டம் கடந்த காலத்தில் கிடப்பில் போடப்பட்டது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தையும் கரோனா 3வது அலையின் தாக்கத்தை கவத்தில் கொண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, படிப்படியாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்து சுற்றுலா பயணிகளை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா காலத்தில் சுற்றுலா தலங்களை நம்பி வாழ்க்கை நடத்திய வியாபாரிகளின் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு நிவாரணஉதவி, கடனுதவி வழங்குவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுற்றுலாத் தலங்களில் உள்ள வியாபாரிகளின் துயர் துடைக்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும் இணைத்து சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, சுற்றுலா பேரூந்து வசதி ஏற்படுத்தப்படும். கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் கழகத்தில் ரூ.8.50 கோடி மதிப்பிலான சொகுசு வசதிகளுடன் கூடிய அதிநவீன படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

விரைவில் இந்தப் படகுகள் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். கன்னியாகுமரியில் இருந்து மணக்குடி வரை கடல் வழியாக சுற்றுலாப் பயணிகள் உல்லாசப் பயணம் மேற்கொள்ள திட்ட மதிப்பீடு தயார் செய்ய சுற்றுலாத்துறை அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

ஆய்வின்போது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், பத்மநாபபரம் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x