

நீர் நிலைகள் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த சுப்பிரமணியன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
’’மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் எதிரே புதுக்குளம் கண்மாய்ப் பகுதிகளில் மயானங்கள் உள்ளன. இவற்றை வேறு இடத்துக்கு மாற்றப் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதியில் தனியார் நிதி உதவியுடன் மின் மயானம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்குத் தடை விதிக்க வேண்டும்’’.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவைத் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, ''தமிழகத்தில் பல்வேறு நீர்நிலைகள் அழிக்கப்பட்டுவிட்டன. இனியும் நீர்நிலைகள் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உயர் நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் நீர் நிலைகளை ஆக்கிரமிக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனவே, மனு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டு விசாரணையை தலைமை நீதிபதி ஒத்திவைத்தார்.