Last Updated : 30 Jul, 2021 02:23 PM

 

Published : 30 Jul 2021 02:23 PM
Last Updated : 30 Jul 2021 02:23 PM

8 மணி நேர பணி உரிமைப் போராட்டம்: 12 பேர் உயிர் நீத்த தினம்; நினைவிடத்தில் அஞ்சலி

புதுச்சேரி

ஆசியாவிலேயே முதல்முறையாக 8 மணி நேர பணி உரிமை பெற போராடியோர் மீது பிரெஞ்சு ராணுவ துப்பாக்கிச்சூட்டில் புதுச்சேரியில் 12 பேர் உயிர் நீத்த தினத்தையொட்டி தியாகிகள் சிலைக்கு பல்வேறு தொழிற்சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

புதுச்சேரியில் கடந்த 1936ம் ஆண்டு ஜுலை 30-ம் நாள் 8 மணி நேர வேலை, உழைப்புக்கு ஏற்ற ஊதியம், பெண் தொழிலாளர்களுக்கு பேறு கால விடுப்பு என தொடர் போராட்டத்தில் பஞ்சாலை தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிரெஞ்சு ராணுவம், தொழிலாளர்கள் மீது துப்பாக்கிகளை கொண்டு தாக்கியது. பின்னர் நடந்த துப்பாக்கி சூட்டில் 12 தொழிலாளர்கள் வீர மரணமடைந்தனர்.

பிரான்சிலும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. பிரெஞ்சு நாடாளுமன்றத்திலும் இந்த பிரச்னை எதிரொலித்ததையடுத்து 1937 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் புதுச்சேரி தொழிலாளர்களுக்கான எட்டு மணிநேர வேலை உரிமை சட்டமும், தொழிற்சங்கம் உரிமை சட்டமும் நிறைவேற்றப்பட்டது. உரிமை போரில் உயிர்நீத்த தொழிலாளர்களின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை மாதம் 30ம் தேதி அன்று தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

குறிப்பாக 12 தொழிலாளர்களை துப்பாக்கியால் சுடப்பட்ட காலை 9 மணிக்கு ஆலை சங்கு ஒலிக்கப்பட்டது.அப்போது மலர்வளையம் வைத்து தியாகிகள் சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுச்சேரியின் தொழிற்சங்க ஸ்தாபகர் வ.சுப்பையா தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு உலகம் முழுவதும் எழுந்த ஆதரவு அலை பிரெஞ்சு அரசைப் பணியவைத்தது என்பது வரலாறு என்று இங்கு கூடியோர் நினைவுகூர்ந்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், ஏஐடியூசி, சிஐடியூ போன்று பல்வேறு தொழிற்சங்கத்தினர் மலர் அஞ்சலி செலுத்த குவிந்தனர்.ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் இன்று கடலூர் சாலையில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பஞ்சாலை தொழிலாளர் ஏஐடியூசி சங்க தலைவர் ரெமி தலைமை தாங்கினார். செயலாளர் அபிஷேகம் தியாகிகளின் பெயரில் உறுதிமொழி வாசித்தார். முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் தியாகிகள் கொடியை ஏற்றி வைத்தார். ஏஐடியூசி கொடியை கன்னியப்பன் ஏற்றி வைத்தார்.

இந்தியகம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம், தேசியக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ நாராகலைநாதன், ஏஐடியூசி மாநில தலைவர் தினேஷ்பொன்னையா, பொதுச்செயலாளர் சேதுசெல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

அதேபோல் சிபிஎம் பிரதேச செயலர் ராஜாங்கம் தலைமையில் ஊர்வலமாக வந்து மலர் வளையம் வைத்து சிபிஎம் நிர்வாகிகள் பெருமாள், முருகன், சிஐடியூ சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x