Published : 30 Jul 2021 12:15 PM
Last Updated : 30 Jul 2021 12:15 PM

மெல்ல அதிகரிக்கும் கரோனா தொற்று; ஊரடங்கு நீட்டிப்பா?- மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை

தமிழகத்தில் மீண்டும் மெல்ல கரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில், ஜூலை 31ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைவதால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம், மெல்ல மெல்லக் குறைந்துவந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்றைய தொற்று 181 என்கிற எண்ணிக்கையைத் தொட்டுள்ளது. இது கடந்த 7 நாட்களில் அதிகபட்ச அளவு ஆகும். தமிழகத் தொற்று எண்ணிக்கை 68 நாட்களுக்குப் பின் மெல்ல அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஊரடங்கில் திரையரங்குகள் உள்ளிட்ட சிலவற்றிற்கு மட்டுமே கட்டுப்பாடு உள்ள நிலையில், பெரும்பாலும் தளர்வுகளை அறிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கரோனா நம்மை விட்டு இன்னும் விலகவில்லை. ஆகவே, பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதல்களை உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருந்தார்.

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் அதைப் பயன்படுத்தி மொத்தமாக ஒன்றுகூடும் நிகழ்வு நடக்கிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்றவற்றில் அலட்சியம் காட்டினால் மீண்டும் கரோனா அலை பரவ வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜூலை 31ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைவதால் ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும், தளர்வுகள், தடைகள் குறித்து ஆலோசிக்கவும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில் மருத்துவ நிபுணர்கள், தலைமைச் செயலர், சுகாதாரத்துறைச் செயலர் உள்ளிட்ட அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

தற்போதுள்ள ஊரடங்கில் சர்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை நீடிக்கிறது. பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் திறக்கப்படவில்லை. பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது குறித்து ஏற்கெனவே ஆலோசனை நடந்து வருகிறது. 9,10,11,12 ஆம் வகுப்புகளை மட்டும் திறக்கலாம் என அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் திறக்க அனுமதிக்கப்படுமா? எனத் திரையுலகினரிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால், கரோனா 3ஆம் அலை பரவல் குறித்த அச்சமும், தற்போது கேரளா, கர்நாடகாவில் அதிகரிக்கும் தொற்றுச் சூழலால் தமிழக அரசு எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டிய நிலையில் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆகவே, இத்தனை அம்சங்களையும் இணைத்தே முதல்வரின் இன்றைய ஆலோசனை இருக்கும். அரசின் முடிவுகளும் அதன் அடிப்படையிலேயே இருக்கும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x