Published : 30 Jul 2021 10:37 am

Updated : 30 Jul 2021 10:37 am

 

Published : 30 Jul 2021 10:37 AM
Last Updated : 30 Jul 2021 10:37 AM

சட்டப்பேரவை நூற்றாண்டு விழா; உண்மைக்கு மாறான கருத்துகளைத் திரித்து கூறுவதா? - ஜெயக்குமாருக்கு எ.வ.வேலு பதிலடி

ev-velu-slams-jayakumar
அமைச்சர் எ.வ.வேலு - ஜெயக்குமார்: கோப்புப்படம்

சென்னை

உண்மைக்கு மாறான கருத்துகளைத் திரித்து கூறுவதை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என, பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அமைச்சர் எ.வ.வேலு நேற்று (ஜூலை 30) வெளியிட்ட அறிக்கை:


"தமிழக சட்டப்பேரவையில் தலைவர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால், விழா கொண்டாட வேண்டும் என்பதற்காக வரலாற்றை மாற்றக்கூடாது என்று முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். சபாநாயகராக இருந்தவருக்கு வரலாறு தெரியாதது வருத்தமளிக்கிறது.

1919-ம் ஆண்டில் மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்களின் அடிப்படையில் தேர்தல் நடைபெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அந்நாளைய மாகாண சட்டப்பேரவைகளில் முதன்முதலாக இடம்பெறத் தொடங்கினர்.

சென்னை மாகாண மன்றத்துக்கு 1920-ம் ஆண்டு நவம்பர் 30-ம் நாள் நிகழ்ந்த பொதுத் தேர்தலில் நீதிக்கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி, சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைச்சரவை பொறுப்பேற்றது.

1921-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் கன்னாட் கோமகனால் முதல் மாகாண சுயாட்சி சட்டப்பேரவை தொடங்கி வைக்கப்பட்டது. பனகல் ராஜா, பி. சுப்பராயன், முனுசாமி நாயுடு, பொப்பிலி ராஜா, பி.டி. ராசன், குர்மா வெங்கடரெட்டி நாயுடு என, நீதிக்கட்சியின் முதல்வர்கள் 17 ஆண்டுக் காலம் பதவி வகித்தார்கள்.

மேற்காணும் முதல்வர்களில் ஒருவரான பி. சுப்பராயனுடைய ஆட்சிக்காலத்தில் இடஒதுக்கீடு வழங்கி, அரசாணை அமல்படுத்தப்பட்டது. எனவேதான், பி. சுப்பராயன் திருவுருவப் படம் பேரவையில் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் 23.3.1947 முதல் 6.4.1949 வரை ஓ.பி. ராமசாமி ரெட்டியார் முதல்வராக இருந்தபோது, நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது. எனவே, அவருடைய திருவுருவப் படமும் பேரவையில் திறந்து வைக்கப்பட்டது.

ஆகவே, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட சட்டப்பேரவை வரலாறு 1921-ம் ஆண்டே தொடங்கி விட்டது. 1-4-1921-ம் நாளன்று, நீதிக்கட்சி ஆண்ட காலத்தில்தான் வாக்காளர் பட்டியலில் மகளிரும் இடம்பெறும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1989-ம் ஆண்டு தலைவர் கருணாநிதியால் கொண்டாடப்பட்ட பொன்விழா பற்றி ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது ஒரு மலர் வெளியிடப்பட்டது. அந்த மலரில் எங்கள் தலைவர் கருணாநிதி எழுதிய அணிந்துரை இடம்பெற்றுள்ளது. அதில் அவர், 'தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வயது இன்று 52' என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜெயக்குமார் தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகராக இருந்தவர், சட்டப்பேரவைக்கும், சட்டமன்றப் பேரவைக்கும் உள்ள வேறுபாடு அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். 1937-ம் ஆண்டில் மதராஸ் மாகாணச் சட்டமன்றம், சட்டமன்ற மேலவையாகவும், வாக்குரிமை பெற்ற வயது வந்த அனைத்து மக்களாலும் நேரிடையாகத் தெரிந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்ட சட்டப்பேரவையாகவும் செயல்படும் முறை பிறந்தது என்பதன் அடிப்படையில் 1989-ம் ஆண்டில் சட்டப்பேரவையின் பொன்விழா கொண்டாடப்பட்டது.

1997-ம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவை பவளவிழா மற்றும் சட்டமன்றப் பேரவை வைரவிழா தலைவர் கருணாநிதியால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழா கொண்டாடும் நோக்கத்துக்காக வரலாற்றை மாற்றி எழுதக்கூடாது என ஜெயக்குமார் கூறியிருக்கிறார். எதற்காக மாற்றி எழுத வேண்டும்? நூற்றாண்டு விழாவின் முக்கியத்துவத்தை உணர்ந்த காரணத்தால்தான் இந்தியக் குடியரசுத் தலைவரும், தமிழக ஆளுநரும் பங்கு பெறுவதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.

ஜெயக்குமார் சொன்னதுபோல, மக்களை முட்டாளாக்கும் முயற்சியில் நாங்கள் செயல்படவில்லை, அனைவரையும் அறிவாளிகளாக்கும் முயற்சியில்தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. டி. ஜெயக்குமார் அமைச்சராக இருந்தபோதும் ஒருவருக்கும் புரியாத கருத்தைப் பேரவையில் சொல்லிவிட்டு உட்கார்ந்து விடுவார். அப்போதெல்லாம் நாங்கள் அவருடைய பேச்சைக் காமெடியாகத்தான் எடுத்துக்கொள்வோம்.

சட்டப்பேரவை சபாநாயகராகப் பணியாற்றிய இவரைப் பதவியேற்ற ஓராண்டிலேயே ஜெயலலிதா அவர்கள் பதவியை விட்டு நீக்கியது ஏன் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இந்த அறிக்கையின் மூலம் அவர் தன்னுடைய அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுபோன்ற உண்மைக்கு மாறான கருத்துகளைத் திரித்து கூறுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தவறவிடாதீர்!எ.வ.வேலுஜெயக்குமார்திமுகஅதிமுககருணாநிதிEV veluJayakumarDMKAIADMKKarunanidhiPOLITICS

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x