

ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்குமாறு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி என்.கிருபாகரன் அமர்வு தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனு:
ஜெயலலிதா பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளான விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் முதுகலை மாணவர் சேர்க்கைக்காக,திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது சட்டவிரோதமானது.
அதேபோல, உயர்கல்வித் துறை செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் பெயரை திட்டமிட்டு புறக்கணித்துள்ளார்.
எனவே, ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு உடனே நிதி ஒதுக்கி, மற்ற பணியிடங்களையும் நிரப்ப அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.வி.தமிழ்செல்வி அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி கிருபாகரன் அமர்வு தெரிவித்தது.
இதையடுத்து, இந்த வழக்கு விரைவில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது.