

வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வீடு, வாகனம் உள்ளிட்ட கடன் தொகைகளை திருப்பிச் செலுத்த 6 மாதம் முதல் ஓராண்டு வரை ரிசர்வ் வங்கி கால அவகாசம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து பொது நல வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையைச் சேர்ந்த ஹைதர் அலி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘‘தமிழகத்தில் பெய்த கனமழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உடைமைகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. பொது மக்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.
இதனால் வங்கிகளிலும், தனியார் நிதி நிறுவனத்திடமும் வாங்கிய கடன் தொகையை திருப்பிச் செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இம்மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு மாத கடன் தவணையை திருப்பிச் செலுத்த 6 மாதகால அவகாசம் அளிக்க வேண்டும். அதுவரை அபராத வட்டி வசூலிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், ரிசர்வ் வங்கி தரப்பில் மத்திய அரசு வழக்கறிஞர் சு.சீனிவாசன், மாநில அரசு சார்பில் தமிழக அரசு வழக்கறிஞர் எஸ்.வி.எஸ்.மூர்த்தி ஆகியோர் ஆஜராகினர்.
ரிசர்வ் வங்கி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘‘தமிழகத்தில் பெய்த கன மழையை இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெறப்பட்ட வீட்டுக்கடன், வீட்டு பராமரிப்பு கடன் ஆகியவற்றை திருப்பிச் செலுத்த ஓராண்டு கால அவகாசம் அளிக்கப்படுகிறது. வாகன கடன், கல்விக்கடன், நுகர்வோர் கடன் ஆகிய கடன்களை திருப்பிச் செலுத்த 6 மாதம் அவகாசம் அளிக்கப்படுகிறது. இதனை வங்கிகள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.