

தேமுதிகவுடன் கூட்டணியை பாஜக இறுதி செய்வது தொடர்பாக ஆலோசிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த வாரத்தில் சென்னை வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூட்டணி தொடர்பாக விஜயகாந்தும், பிரகாஷ் ஜவடேகரும் ஏற்கெனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொலைபேசியில் பேசிவிட்ட நிலையில் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு குறித்து பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, "தமிழக தேர்தல் முன்னேற்பாடுகளை கவனிக்குமாறு பிரகாஷ் ஜவடேகரையும், பியுஷ் கோயலையும் அமித் ஷா நியமித்துள்ளார். ஆனால், பட்ஜெட் ஆயத்தப் பணிகளால் அவர்களால் தேர்தல் பணியில் சில நாட்களாக கவனம் செலுத்த முடியாமல் இருந்தது.
இந்நிலையில், கூட்டணி தொடர்பாக விஜயகாந்தும், பிரகாஷ் ஜவடேகரும் தொலைபேசியில் ஆலோசித்துவிட்டனர். அதன் அடிப்படையில், இந்த வாரத்திலேயே ஜவடேகரும், பியுஷ் கோயலும் சென்னை வருகின்றனர். தேர்தல் கூட்டணி தொடர்பாக விஜயகாந்துடன் நேரடியாக ஆலோசிக்கின்றனர்.
பிப்ரவரி 20-ம் தேதிக்குள் தமிழக தேர்தல் கூட்டணியை உறுதி செய்யுமாறு கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
கூட்டணி முடிவு எதுமாதிரியாக இருந்தாலும் மார்ச் 1 முதல் பாஜக களத்தில் இறங்காவிட்டால் கட்சிக்கு அது பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, இன்னும் 10 நாட்களில் தேர்தல் கூட்டணி முடிவாகிவிடும். அதன் பின்னர் மத்திய அமைச்சர்கள் பலரும் தமிழகத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியும் மாநிலத்தில் பிரச்சாரங்கள் மேற்கொள்வார்" என்றார்.
சூடுபிடிக்கும் கூட்டணி காலம்:
இது கூட்டணியை உறுதி செய்யும் காலம் என்பதால் தமிழக அரசியலில் பரபரப்பு மிகுந்துள்ளது. திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்வது குறித்து ஆலோசிக்க குலாம் நபி ஆசாத் தமிழகம் வரவிருக்கும் நிலையில், தற்போது பாஜக மேலிடத்திலிருந்தும் சென்னைக்கு படையெடுப்பு தொடங்கவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.