

ஸ்ரீவைகுண்டம் அணையில் இரவில் தூர் வார அனுமதிக்கக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நேற்று வாதிட்டார்.
ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாரக் கோரி தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலர் எஸ்.ஜோயல், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 2-ம் அமர்வில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு, வேளாண் ஆர்வலர் நயினார் குலசேகரன் ஆகியோரும் இந்த வழக்கில் தங்களை மனுதாரர்களாக இணைத்துக்கொண்டனர்.
இந்த மனு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆர்.நல்லகண்ணு ஆஜராகி, ஸ்ரீவைகுண்டம் அணை யில் தூர் வாரும் பணி என்ற பெய ரில் மணல் அள்ளும் பணி தான் நடைபெற்று வருகிறது. அணையில் உள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்றிவிட்டதாக பொதுப்பணித் துறையினர், அமர்வில் தெரிவிக் கின்றனர். ஆனால் அங்கு ஆகாயத் தாமரை செடிகள் அகற்றப்படாமல் கிடக்கிறது. அதற்கான புகைப்படங் களையும் வழங்கியிருக்கிறேன். மேலும் அணையின் மதகு கதவுகள் கடந்த 15 ஆண்டுகளாக பழுது பார்க்கப்படவில்லை. அத னால் இந்த மழைக்கு கிடைத்த நீரை தேக்கி வைக்க முடியா மல், அதிக அளவில் வெளியேறி விட்டது. இப்போதும் நீர் வெளி யேறிக்கொண்டு தான் இருக்கிறது. இதனால் வரும் நாட்களில் 25 ஆயிரம் ஏக்கரில் அங்கு மேற் கொள்ளப்பட்டு வரும் விவசாயம், இந்த அணையை ஆதாரமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் அனைத்தும் பாதிக்கும். அதனால் தேவையின்றி நீர் திறக்கப்படுவதை தடுக்க வேண்டும். தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.
அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் அப்துல் சலீம் ஆஜராகி, அணையில் 7 அடி உயரத்துக்கு நீர் தேங்கியுள்ளது. மேலும் தூர் வாரும் மண்ணை விரைவாக எடுத்துச் செல்ல போதுமான சாலைகள் இல்லை. அதனால் பணிகளை விரைந்து முடிக்க காலை 7 முதல் மாலை 6 மணி வரை மட்டுமல்லாது, இரவிலும் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட நல்ல கண்ணு, இரவில் தூர்வார அனுமதித்தால், அது மணல் கொள்ளைக்கு தான் வழி வகுக்கும். அதனால் இரவில் தூர் வார அனுமதிக்கக் கூடாது என்று வாதிட்டார்.
பின்னர், அணையின் முதல் 2 பகுதிகளை 50 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். இதற்கு மேல் இனி தூர் வார அவகாசம் வழங்க முடியாது. இரவில் தூர் வார அனுமதிக்க முடியாது. இப்பணியை மதுரை மண்டல பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அமர்வின் உறுப்பினர்கள் உத்தர விட்டனர். மனு மீதான விசாரணை பிப்ரவரி 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.