Last Updated : 29 Jul, 2021 05:03 PM

 

Published : 29 Jul 2021 05:03 PM
Last Updated : 29 Jul 2021 05:03 PM

தொழிலாளர்கள் விஷயத்தில் மத்திய அரசு தவறான கொள்கையைக் கடைப்பிடிக்கிறது: ஐஎன்டியுசி அகில இந்தியத் தலைவர் குற்றச்சாட்டு

புதுச்சேரி

தொழிலாளர் விஷயத்தில் மத்திய அரசு தவறான கொள்கையைக் கடைப்பிடிக்கிறது என ஐஎன்டியுசி அகில இந்தியத் தலைவர் சஞ்சீவ ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி மாநில ஐஎன்டியுசி முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன் உருவப்படத் திறப்பு மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சி, வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் இன்று (ஜூலை 29) நடைபெற்றது. இதில் ஐஎன்டியுசி அகில இந்தியத் தலைவர் சஞ்சீவ ரெட்டி கலந்துகொண்டு ரவிச்சந்திரன் படத்தைத் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு மூடுவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களில், ஒன்று லாபம் தரும் நிறுவனங்கள், மற்றொன்று இழப்பை ஏற்படுத்தும் நிறுவனங்கள் என இரண்டாகப் பிரிக்கலாம்.

இவற்றில் இழப்பை ஏற்படுத்துகின்ற நிறுவனங்களைத் தனியார் பங்களிப்புடன் சீர்படுத்தலாம். ஆனால், லாபம் ஈட்டும் நிறுவனங்களையும் மத்திய அரசு மூடுவது ஏற்புடையதல்ல. இதனை ஐஎன்டியூசி உள்ளிட்ட அனைத்து மத்திய, மாநில தொழிற்சங்கங்களும் எதிர்க்கின்றன.

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கையை எதிர்த்துப் பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, லாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்களை மூடுவதை எதிர்க்கிறது.

சமீபத்தில் மத்திய அரசு விசாகப்பட்டினம் ஸ்டீல் பிளாண்ட்டைத் தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது. தற்போது, அனைத்து ஸ்டீல் பிளாண்ட்டுகளும் கடந்த ஓராண்டுகாலமாக நன்றாகவே இயங்குகின்றன. ஆனால், நஷ்டம் எனக் கூறி தனியாரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவதால், ஆள்குறைப்பு நடவடிக்கையை எடுத்து ஒப்பந்த ஊழியர்களை நியமிக்கின்றனர். இதனால், நிரந்தர ஊழியருக்கு மாதம் ரூ.1 லட்சம் அளவில் ஊதியம் என்ற நிலையை மாற்றி, ஒப்பந்த ஊழியருக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து முடக்குகின்றனர். ஊழியர்களின் உழைப்புக்கேற்ற ஊதியத்தைக் குறைப்பது வேதனையாகும்.

மத்திய அரசு 30 சதவீதம் நிரந்தர ஊழியர்கள், 60 சதவீதம் ஒப்பந்த ஊழியர்கள் என்ற நிலையை ஏற்படுத்துகிறது. தொழிலாளர்களின் ஊதியம் குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் இருக்க வேண்டும் என்பதை ஐஎன்டியூசி வலியுறுத்துகிறது.

தொழிலாளர்கள் விஷயத்தில் மத்திய அரசு தவறான கொள்கையைக் கடைப்பிடிக்கிறது. ரயில்வே, நிலக்கரி, காப்பீடு நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கிறது. இதனால், பொதுத்துறை தனியார் மயம், தொழிலாளர் விரோத நடவடிக்கையைக் கண்டித்தும், மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் ஆகஸ்ட் 7-ம் தேதி டெல்லியில் தொழிற்சங்கங்களை ஒருங்கிணைத்துப் போராட உள்ளோம்.’’

இவ்வாறு சஞ்சீவ ரெட்டி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x