

முதல்வர் ஸ்டாலின் மீது ட்விட்டரில் அவதூறாகப் பதிவிட்டதாக, சைபர் கிரைம் போலீஸாரால் அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மகாமூர்த்தி. இவரது மகன் தென்னரசு. இவர் அதிமுக ஒன்றிய விவசாய அணிச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
திமுக அரசையும் முதல்வரையும் பற்றி ஆபாச வார்த்தைகளால் ட்விட்டரில் பதிவிட்டதாகவும், நடிகைகள் மற்றும் பெண்களை ஆபாச வார்த்தைகளால் சித்திரித்தும், பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகப் பதிவு செய்துள்ளதாகவும் கூறி சைபர் கிரைம் போலீஸார் தென்னரசுவை நொச்சிகுளம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் கைது செய்து திருச்சுழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவரிடம் திருச்சுழி காவல் நிலைய ஆய்வாளர் நிதிக்குமார் மற்றும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவரது செல்போனைப் பறிமுதல் செய்து அதில் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.