

பிளஸ் 2 மாணவர்களின் இம்ப்ரூவ்மென்ட் தேர்வு (மேம்பாட்டுத் தேர்வு) முடிவுகள் வெளியிடப்படும் வரை மாணவர் சேர்க்கைப் பட்டியலை இறுதி செய்யப் பல்கலைக்கழகங்களுக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதால், நடப்புக் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, 10 மற்றும் 11ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு ஜூலை 31ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் ஜூலை 19-ம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை தமிழக அரசு வெளியிட்டது. ஜூலை 22-ம் தேதி மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டன. இதில் திருப்தி அடையாத மாணவர்கள் விரும்பினால் கூடுதல் மதிப்பெண்கள் பெற இம்ப்ரூவ்மென்ட் தேர்வு (மேம்பாட்டுத் தேர்வு) நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, இந்த இம்ப்ரூவ்மென்ட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை மாணவர் சேர்க்கைப் பட்டியலை இறுதி செய்ய அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் தடை விதிக்கக் கோரி, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், தற்போது வெளியிடப்பட்ட பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அடிப்படையில் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை நடத்தினால், கூடுதல் மதிப்பெண் பெறத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் பாதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வு, வெறும் ஊகத்தின் அடிப்படையில் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கைத் தொடர மனுதாரருக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனவும் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், பாதிக்கப்படும் மாணவர்கள் இந்நீதிமன்றத்தை அணுக எந்தத் தடையும் இல்லை எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.