Published : 29 Jul 2021 03:12 AM
Last Updated : 29 Jul 2021 03:12 AM

விடுபட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்; ஆயிரம் வாக்காளர்களுக்கு மிகாமல் வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும்: மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

விடுபட்ட மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் 1,000 வாக்காளர்களுக்கு மிகாமல் வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்னும் நடைபெறவில்லை. அப்பகுதிகளில் தேர்தல் நடத்தக் கோரிய வழக்கில் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, மீதமுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் வாக்குச்சாவடி அமைத்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் தயாரித்தல் தொடர்பாக அறிவுரை வழங்குதல் குறித்த கையேடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

ஒரு வார்டில் 400 வாக்காளர்களுக்கு குறைவாக இருந்தால், அந்த வார்டுக்கென தனி வாக்குச்சாவடி அமைக்க வேண்டியதில்லை. அருகில் உள்ள மற்றொரு வார்டுடன் சேர்த்து வாக்குச்சாவடி அமைக்கலாம். அதே நேரத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மத உணர்வுகளைப் பாதிக்கக்கூடிய அல்லது சமுதாயப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக்கூடிய இடத்திலோ அல்லது அருகிலோ வாக்குச்சாவடி அமைக்கக் கூடாது. வாக்குச்சாவடி மையங்களை அமைக்கும் இடங்களைத் தேர்வு செய்யும்போது, ஏற்கெனவே சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குச்சாவடியாக பயன்படுத்தப்பட்ட கட்டிடத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தனியார் கட்டிடங்களில் வாக்குச்சாவடி அமைப்பதை தவிர்க்க வேண்டும்.

அச்சிடப்பட்ட வாக்காளர் பட்டியல்கள், பக்கம்வாரியாக சரியாக அச்சிடப்பட்டுள்ளனவா என்பதையும், அச்சிட்ட பிரதிகள் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனவா என்பதையும் சரிபார்க்க உரிய அலுவலர்களை, ஊராட்சி வாக்காளர் பதிவு அலுவலர் ஏற்பாடு செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இப்பணிகளை அச்சகத்தினரிடம் விடக்கூடாது. இவ்வாறு அந்தக் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x