Published : 29 Jul 2021 03:12 AM
Last Updated : 29 Jul 2021 03:12 AM

ஆக்சிஜன் உற்பத்திக்கான அனுமதியை நீட்டிக்க வலியுறுத்தி ஸ்டெர்லைட் சுற்றுவட்டார கிராமங்களில் மக்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கரோனா தொற்றின் 2-வது அலை பாதிப்பு அதிகம் இருந்த நேரத்தில்,நாடு முழுவதும் மருத்துவ ஆக்சிஜன் தேவை பல மடங்கு அதிகரித்தது. இதையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் தமிழக அரசு அனுமதி அளித்தது. அங்கு, இதுவரை 2,100 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனும், 11 மெட்ரிக் டன் வாயு நிலை ஆக்சிஜனும் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் அளித்த 3 மாதஅனுமதி இம்மாதம் 31-ம் தேதியோடு முடிவடைகிறது. கரோனா தொற்று இன்னும் முழுமையாக குறையவில்லை. மேலும் 3-வது அலை தாக்கக்கூடும் என்ற எச்சரிக்கையும் உள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் எனக் கோரி, ஸ்டெர்லைட் நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரவுள்ளது.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கான அனுமதியை நீட்டிக்கக் கூடாது என எதிர்ப்பாளர்களும், மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என ஆதரவாளர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி உள்ள மீளவிட்டான், சாமிநத்தம், ராஜாவின் கோவில், மடத்தூர், தெற்கு சங்கரபேரி, வடக்கு சங்கரபேரி, அய்யனடைப்பு, தெற்கு வீரபாண்டியபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அந்தந்த பகுதியில் நேற்று காலையில் திரண்டு, `ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கான அனுமதியை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க வேண்டும்’ என வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டங்களில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். ‘முன்னெச்சரிக்கை முக்கியமானது, உயிர்கள் விலை மதிப்பற்றது, எனவே ஆக்சிஜன் உற்பத்திக்கு மேலும் 6 மாதம் அனுமதி அளிக்க வேண்டும்' என அவர்கள் கோஷமிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கிடையாது என தெரிவித்ததால் மக்கள் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x