Last Updated : 29 Jul, 2021 03:12 AM

 

Published : 29 Jul 2021 03:12 AM
Last Updated : 29 Jul 2021 03:12 AM

அறிவியலை போதிக்கும் மையமாக கோவையில் உருவாகிறது புதிய உயிரியல் பூங்கா: 25 ஏக்கர் பரப்பளவில் நவீன அம்சங்களுடன் கட்டமைக்க திட்டம்

நவீன வளர்ச்சிக்கு ஏற்ப அறிவியலை போதிக்கும் மையமாக கோவையில் மாநகராட்சி சார்பில் சுமார் 25 ஏக்கர்பரப்பளவில் புதிய உயிரியல் பூங்காவை கட்டமைக்க திட்டமிடப் பட்டுள்ளது.

கோவையின் அடையாளங்களில் ஒன்றாக உள்ள நேரு விளையாட்டு அரங்கு அருகில் மாநகராட்சி வ.உ.சி. உயிரியல் பூங்கா உள்ளது. கடந்த 1965-ம் ஆண்டு இப்பூங்கா உருவாக்கப்பட்டது. ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என 40 இனங்களில் 400 விலங்கினங்கள் வரை உயிரியல் பூங்காவில்வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.

சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்னதாககட்டமைக்கப்பட்ட பூங்கா என்பதால் கோவை உயிரியல் பூங்கா இன்னும் அதே பழைய கால கட்டமைப்பு திட்டங்களுடன் மட்டுமே உள்ளது. மேலை நாடுகள் மற்றும் இந்தியாவில் பிற நகரங்களில் உயிரியல் பூங்கா என்பது அறிவியல் சார்ந்த விஷயங்களை போதிக்கும் இடமாக மாற்றப்பட்டு விட்டன.

இந்நிலையில் கோவையில் அத்தகைய அம்சங்களுடன் கூடிய புதிய உயிரியல் பூங்கா ஒன்று கட்டமைக்கப்படவுள்ளது. கோவை நஞ்சப்பா சாலையில் சிறை மைதானம் எனப்படும் பகுதியில் மாநகராட்சிக்குரிய இடத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் இந்த நவீன உயிரியல் பூங்கா அமைய உள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து பூங்கா திட்டமிடலில் உள்ள மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

கோவையில் தற்போது உள்ள உயிரியல் பூங்கா அந்த காலத்தைய திட்டமிடல்களுடன், அப்போது இருந்த அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப கட்டமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அறிவியலின் வளர்ச்சி பன்மடங்கு உயர்ந்து விட்டது. அத்தகைய வளர்ச்சிக்கு ஏற்ப பூங்காவின் கட்டமைப்புகள் இல்லை.

அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தில் வன விலங்குகள், இயற்கை வளங்கள் அதிகளவில் அழிக்கப்பட்டு வருகின்றன. இதே நிலை தொடரக் கூடாது. விலங்கினங்களின் தன்மைகள், அவை வாழும் சூழல் பற்றி தெரிந்து கொண்டாலே விலங்கினங்களைப் பார்த்து அச்சம் கொள்வது, அவற்றை பற்றிய தவறான எண்ணங்கள் மாறி விடும். அதுபோன்ற அறிவு வளர்ச்சி மற்றும் அறிவியல் சார்ந்த விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் மையமாக புதிய பூங்கா கட்டமைக்கப்படவுள்ளது.

புதிய உயிரியல் பூங்கா வந்தவுடன் பழைய பூங்கா இடிக்கப்படாது. பழைய பூங்காவும், சூழலுக்கு தகுந்த விலங்கினங்களுடன் தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு செயல்படும். இரு பூங்காக்களையும் இணைக்க நெடுஞ்சாலையின் குறுக்காக பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

புதிய உயிரியல் பூங்கா கட்டமைப்பது குறித்து மாநகராட்சி உயிரியல் பூங்கா இயக்குநரான மருத்துவர் செந்தில்நாதனிடம் கேட்டபோது, ‘இதற்கென தனியார் கன்சல்டன்ட் நிறுவனம் மூலமாக விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x