Last Updated : 29 Jul, 2021 03:13 AM

 

Published : 29 Jul 2021 03:13 AM
Last Updated : 29 Jul 2021 03:13 AM

2006-ல் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ‘கிரிஷ்மா’ மாங்கூழ் ஏற்றுமதி திட்டம் செயல்படுத்தப்படுமா?- வாழ்வாதாரத்தை காக்க மா விவசாயிகள் எதிர்பார்ப்பு

கிருஷ்ணகிரியில் மாங்கூழ் தொழிற்சாலையில் அரவைக்காக மாங்காய்கள் சுத்தப்படுத்தும் தொழிலாளர்கள். (கோப்பு படம்)

கிருஷ்ணகிரி

கிரிஷ்மா மாங்கூழ் ஏற்றுமதி திட்டத்தை செயல்படுத்தி, தங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என மாவிவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் மா உற்பத்தியில் முதன்மை வகிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் மாமரங்கள் பயிரிடப்பட்டுள்ளது. இதிலிருந்து சுமார் 3 லட்சத்து 52 ஆயிரத்து 436 மெட்ரிக் டன் மா உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளில் வறட்சி, மழையின்மை, மாங்கூழ் தொழிற்சாலைகளின் சிண்டிகேட் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாவிவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.

மாவிவசாயிகள் கூறும்போது, மா மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.657.66 கோடி வர்த்தகம் நடைபெறுகிறது. ஆனாலும் படிப்படியாக மா விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். கடந்த 2006-ம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியில் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக மறைந்த முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட கிரிஷ்மா மாங்கூழ் ஏற்றுமதி திட்டத்தை செயல்படுத்தி எங்கள் வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசு முன்வரும் என்கிற நம்பிக்கையில் இருப்பதாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான செங்குட்டுவன் கூறும்போது, மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் 3.50 லட்சம் மெட்ரிக் டன் மா உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 2 லட்சம் மெட்ரிக் டன் மா நுகர்வுக்கும், மாங்கூழாகவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 1.50 லட்சம் மெட்ரிக் டன் மாங்காய்கள் பயன்படுத்தப்படாமல் சாலையோரம் வீசப்படுகிறது. இதனால் மாவிவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

மாவிவசாயிகளுக்காக 2006-ம் ஆண்டு 'கிரிஷ்மா' திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக ஆலப்பட்டியில் வனத்தை ஒட்டியவாறு 75 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. திட்ட மதிப்பீடு ரூ.150 கோடி தயார் செய்தனர்.

கிரிஷ்மா திட்டம் செயல்படுத்துவதன் மூலம் நமது மாவட்டத்தின் பெயரில், வெளிநாடுகளில் மாங்கூழ் விற்பனை செய்து, மா விவசாயிகளுக்கும், மாங்கூழ் உற்பத்தியாளர்களுக்கு வருவாய் கிடைக்கும். மாவட்டத்திலுள்ள விவசாய பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்கிற நோக்கில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இத்திட்டம் கிடப்பில் உள்ளது. மீண்டும் இத்திட்டம் செயல்படுத்திட தமிழக முதல்வர் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x