Published : 29 Jul 2021 03:13 AM
Last Updated : 29 Jul 2021 03:13 AM

அனுமதிக்கப்பட்ட அளவைவிட 4 மடங்கு காற்று மாசு; சென்னையில் உள்ளூர் காற்றின் தர கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும்: ஆரோக்கிய திறனுக்கான முன்முயற்சி அமைப்பு யோசனை

சென்னையில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 4 மடங்கு வரை காற்று மாசு உயர்ந்துள்ளதாகவும், அதைக் கட்டுப்படுத்த உள்ளூர் காற்றின் தர கண்காணிப்பை அரசு பலப்படுத்த வேண்டும் என்றும் ஆரோக்கிய திறனுக்கான முன்முயற்சி அமைப்பு யோசனை தெரிவித்துள்ளது.

‘ஆரோக்கிய திறனுக்கான முன்முயற்சி’ என்ற அமைப்பு சென்னையில் திரிசூலம், பாரிமுனை, காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் அனல் மின்நிலையம் அருகில் உள்ள செப்பாக்கம், வேளச்சேரி, தியாகராயநகர் உள்ளிட்ட 20 இடங்களில் கடந்தபிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 24 மணி நேர தொடர் காற்றுத் தர பரிசோதனையை நடத்தியது.

ஒரு கனமீட்டர் காற்றில் 2.5 மைக்ரான் அளவுகொண்ட காற்றில் மிதக்கும் நுண் துகள்களின் அளவு (PM2.5) 60 மைக்ரோகிராம் வரை இருப்பது அனுமதிக்கப்பட்ட அளவாகும். ஆனால் இந்த ஆய்வில் அனுமதிக்கப்பட்ட மாசு அளவை விட 4 மடங்கு அதிகமாக மாசு பதிவாகி இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

திரிசூலம், பாரிமுனை, வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வில் 176 மைக்ரோ கிராம் முதல் 228 மைக்ரோ கிராம் வரை காற்று மாசு இருந்தது.

128 மைக்ரோகிராம்

திருவொற்றியூர், காசிமேடு (துறைமுகம் அருகே), துரைப்பாக்கம் (குப்பை கொட்டும் வளாகம் அருகில்), குருவிமேடு (அனல்மின் நிலைய நிலக்கரி சாம்பல் குளம் அருகே), சோழிங்கநல்லூர் (பழைய மகாபலிபுரம் நெடுஞ்சாலை அருகில்), வேளச்சேரி, நொச்சிக்குப்பம், கொடுங்கையூர் (குப்பை கொட்டும் வளாகம்அருகில்), மீஞ்சூர், உர்ணாம்பேடு, செப்பாக்கம் (நிலக்கரி சாம்பல் குளம் அருகே) பெரும்புதூர், தியாகரயநகர், அத்திப்பேடு, காட்டுக்குப்பம், அம்பத்தூர் ஆகியஇடங்களில் பிஎம் 2.5 மாசு 59 முதல் 128 மைக்ரோகிராமாக இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. காட்டுப்பள்ளி குப்பத்தில் 53 மைக்ரோ கிராமாக இது இருந்தது.

இந்த ஆய்வு முடிவுகளை பார்க்கும்போது, இது அமெரிக்க காற்று தர நிர்ணய விதிகளின்படி ஆரோக்கியமற்ற நிலையாகும். இப்பகுதியில் வாழும், இதய அல்லது நுரையீரல் பிரச்சினை உள்ளவர்கள், வயதானவர்கள், சிறார்கள் உடல் ரீதியான செயல்பாடுகளை அதிகம் மேற்கொள்ளக் கூடாது என அந்த விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காற்றுத் தர கண்காணிப்பில் ஈடுபட்ட ஆய்வாளர் விஸ்வஜா சம்பத் கூறும்போது, “நிலக்கரியை எரிப்பதால்பெறப்படும் மின் பயன்பாட்டைக் குறைப்பது, போக்குவரத்து போன்றவற்றில் மாற்றம் ஏற்படுத்துவதன் மூலம் காற்று மாசுவையும்,அதனால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளையும் குறைக்க முடிவும். சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பிற நகர்ப்புற உள்ளாட்சிஅமைப்புகள் வலுவான உள்ளூர்காற்றுத் தர கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x