Published : 29 Jul 2021 03:13 AM
Last Updated : 29 Jul 2021 03:13 AM

பெண்கள் விடாமுயற்சியுடன் போராடினால் வெற்றி பெறலாம்: நாசா பொறியாளர் நம்பிக்கை

ஸ்வாதி மோகன்

சென்னை

பெண்கள் விடாமுயற்சியுடன் போராடினால் வெற்றி பெறலாம் என்று நாசாவின் பொறியாளர் ஸ்வாதி மோகன் தெரிவித்துள்ளார்.

சென்னை அமெரிக்க துணைத் தூதரகம் சார்பில்‘புலம்பெயர்ந்த சாதனையாளர்கள்’ என்ற தலைப்பில் இணையவழியிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகளில் அமெரிக்காவில் கல்வி, அறிவியல் உட்பட பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்த புலம் பெயர்ந்த இந்தியர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

இந்த தொடரின் முதல் நிகழ்வு இணையவழியில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா பொறியாளர் ஸ்வாதி மோகன் கலந்து கொண்டு பேசியதாவது:

நம் வாழ்வில் சாதனை புரிய நம் திறமைகளை அறிந்து வைத்திருப்பது அவசியம். அதன்மூலம் நமக்கு பிடித்த துறைகளைத் தேர்வு செய்து கடுமையாக உழைக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் எனக்கு மருத்துவராக விருப்பம் இருந்தது. ஆனால், பள்ளிப் படிப்பின்போது உயிரியல் பாடத்தைவிட இயற்பியல் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டது. இதனால் பொறியியல் துறையை தேர்வுசெய்து படித்தேன்.

அதன்பின் விண்வெளி அறிவியல் மீது ஆர்வம் கொண்டு நாசாவில் பல்வேறு பயிற்சித் திட்டங்களில் பங்காற்றினேன். தொடர்ந்து நாசாவில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. நீண்டகால பணிக்குபின் நாசா பொறியியல் குழுவில் மேற்பார்வையாளராக உயர்ந்து, செவ்வாய் கிரகத்துக்கு ரோவர் அனுப்பும் திட்டத்தில் இடம்பெற்று முக்கிய பங்காற்றினேன்.

விண்வெளி ஆராய்ச்சித் துறையில் ஆண்களின் ஆதிக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது. பெண்கள் இந்த துறைக்கு வரும்போது பெரும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. தற்போது மாறி வரும் நாகரிக வளர்ச்சியால் இனிவரும் காலங்களில் இந்நிலை மாறும். விண்வெளித் துறை சார்ந்து ஆர்வம் வளர அதுகுறித்த புத்தகங்களை அதிகம் படிக்க வேண்டும். சமூக கட்டமைப்பு அழுத்தங்கள் உட்பட எத்தகைய சூழலிலும் பெண்கள் விடாமுயற்சியுடன் போராடினால் வெற்றி பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலரின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். இந்த நிகழ்வில் சென்னை அமெரிக்க துணைத்தூதர் ஜூடித் ரேவின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x