

திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் நலனுக்காக தமிழக அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் நடைபெற்றஇந்தக் கூட்டத்தில், மாநில சிறுபான்மையின ஆணைய உறுப்பினர் - செயலர் துரை. ரவிச்சந்திரன், ஆணைய துணைத் தலைவர் மஸ்தான், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையின மக்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, அரசின் நலத் திட்டங்கள் முழுமையாக தங்களுக்கு கிடைப்பதில் உள்ள சிக்கல்கள், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அடக்கஸ்தலங்கள், கல்லறைகள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தனர்.
இதைக் கேட்டறிந்த ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், “இவை அனைத்தும், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய தீர்வு காணப்படும்” என்றார். தொடர்ந்து, சிறுபான்மையினத்தைச் சேர்ந்த 32 பேருக்கு ரூ.3.79 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பிறகு, அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் அரசால் சிறுபான்மையினருக்காக செயல்படுத்தப்படும் எவ்விதத் திட்டங்களும் கடந்த 10 ஆண்டுகளாக முறையாக அமல்படுத்தப்படவில்லை என்பது இந்த ஆய்வின் மூலம் தெரிகிறது. இந்த ஆண்டு முதல் அனைத்து திட்டங்களும் முழுமையாக சிறுபான்மையின மக்களை சென்றடையும் வண்ணம், தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்ஆய்வுக் கூட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வரலாற்றிலேயே முதன் முறையாக சிறுபான்மையினர் நலத்துறை என்ற புதிய அமைச்சகத்தை உருவாக்கி, அத்துறை அமைச்சருடன் தமிழக முதல்வர் பல புதிய திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளார். அத்திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மையினரின் அடக்கஸ்தலங்கள், கல்லறைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், ஈமச்சடங்குகளை நிறைவேற்றுவதில் பல இன்னல்கள் உள்ளதை அறிய முடிகிறது.
ஆகவே, தமிழகத்தில் சட்டத்துக்கு புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சிறுபான்மையின மக்களின் நிலங்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.