மாற்று வழியில் கெயில் திட்டம்: கருணாநிதி யோசனை

மாற்று வழியில் கெயில் திட்டம்: கருணாநிதி யோசனை
Updated on
1 min read

விவசாயிகளுக்கு எந்தவிதமான பாதகமும் ஏற்படாத வகையில் கெயில் திட்டத்தை மாற்றுவழியில் மேற்கொள்ள வேண்டுமென்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்திலே உள்ள விளை நிலங்கள் வழியாக 'கெயில்' நிறுவனத்தின் எரிவாயுக் குழாய்களைப் பதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தப் பிரச்சினை பற்றி 25-3-2013 அன்று நடைபெற்ற தி.மு.கழகத்தின் தலைமைச் செயற்குழுவிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், "இந்திய எரிவாயுக் கழகம் கேரளா மற்றும் கர்நாடகாவில் விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத வகையில் விவசாய நிலங்களைத் தவிர்த்து விட்டு, அரசுக்குச் சொந்தமான சாலையோரங்களில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில்,

தமிழ்நாட்டில் மட்டும் விவசாயிகளின் விளைநிலங்கள் வழியே குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது, விவசாயிகள் மத்தியில் பெரும் பாதிப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தமிழக விவசாயிகளுக்கு எந்தவிதமான பாதகமும் ஏற்படாத வகையில், சாலைகள் மற்றும் தேசீய நெடுஞ்சாலை யோரங்களில் இப்பணியைத் தொடர இந்தச் செயற் குழு வலியுறுத்துகிறது” என்று குறிப்பிட்டிருந்தோம். மீண்டும் 17-4-2013 அன்று நான் இதுகுறித்து விரிவான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தேன்.

திமுகவைப் பொறுத்தவரையில் கெயில் நிறுவனம் குழாய்களைப் பதிப்பதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் அந்தக் குழாய்கள் விளை நிலங்களையும், விவசாயிகளையும் பாதிக்காமல் பதிக்கப்பட வேண்டுமென்று தொடக்கத்திலிருந்து கூறி வருகிறோம்.

தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக எரிவாயுக் குழாய்களைப் பதித்து, திட்டத்தைச் செயல்படுத்துமாறு 2013ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கெயில் நிறுவனம் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதி மன்றம் தமிழக அரசின் ஆணைக்குத் தடை விதித்தது.

இதைத் தொடர்ந்து உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இரண்டாண்டுகளுக்குப் பிறகு தற்போது

உச்ச நீதி மன்றம் “கெயில் நிறுவனத்திற்குத் தடை விதித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது. தமிழகத்தில் கெயில் நிறுவனம் உத்தேசித்த எரிவாயு திட்டத்தை விவசாய நிலங்களின் வழியாகவே செயல்படுத்தலாம்" என்று உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பு காரணமாக தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சியினரும் விவசாயிகளும் பெரிதும் அதிர்ச்சிக்கு

உள்ளாகியுள்ளனர். எனவே இந்த நிலையில், தமிழக அரசு உடனடியாக இந்தத் தீர்ப்பை எதிர்த்துச் 'சீராய்வு' மனு தாக்கல் செய்தோ, அல்லது விவசாயிகளுக்கு எந்தவிதமான பாதகமும் ஏற்படாத வகையில், அனைத்துத் தரப்பினரிடமும் கலந்து பேசியோ ஒரு சுமூக முடிவு காண்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்" எனக் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in