

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் அரசியல் சாசன சட்டப்பிரிவு 161-ஐ பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்வார் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நம்பிக்கை தெரிவித்தார்.
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஈரோட்டில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 25 ஆண்டுகளாக செய்யாத குற்றத்துக்காக என் மகன் பேரறிவாளன் சிறையில் உள்ளார். பேரறிவாளனிடம் வாக்கு மூலம் வாங்கிய அதிகாரி, தண்டனையளித்த நீதிபதி, சிறை யில் கண்காணித்த கண்காணிப் பாளர் என அனைவரும் இந்த சிறை தண்டனைக்கு பேரறிவாளன் உரித்தானவர் அல்ல; அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என அறிக்கை கொடுக்கின்றனர்.
கடந்த ஒன்றரை ஆண்டு களுக்கு முன்னர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்வதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அன்றைய காங்கிரஸ் அரசு இவர்களின் விடுதலையை எதிர்த்ததால் அது நின்றுபோனது. அதன்பின்னர் அமைந்த மோடி அரசும் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இன்றுவரை அவர்களை எப்படி வெளியில் கொண்டு வருவது என்று தெரியாமல் தவிக்கிறோம்; சட்டப் படியாக போராடுகிறோம்.
எனவே, அனைத்து ஆயுள் சிறைவாசிகளுக்காகவும், இவர் களது விடுதலையை முன் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. பிணையில் வர என் மகனுக்கு விருப்பமில்லை. நிரபராதி என தெரிந்தபின்னர் முழு விடுதலை பெற்று வெளியில் வரவே அவர் விரும்புகிறார். தமிழ் திரைப்பட இயக்குநர்களும் முதல்வரை சந்திக்க தேதி கேட்டு காத்திருக் கிறார்கள். தமிழக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் அரசியல் சாசன சட்டப்பிரிவு 161-ஐ பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்வார். இன்னும் 10 நாட்களில் இதுதொடர்பாக அறிவிப்பார் என நம்புகிறோம். அவ்வாறு விடுதலை செய்தால் இதில் மத்திய அரசு தலையிட முடியாது என்பதையும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.