

காரைக்குடி அருகே ரசாயன ஆலையில் வெளியான நச்சு புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம் செய்தனர்.
கோவிலூர் தனியார் ரசாயன ஆலையில் சல்ப்யூரிக் ஆசிட், சோடியம் ஹைட்ரோ சல்பைடு தயாரிக்கப்பட்டு வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 24 மணி நேரமும் இயங்கும் இந்த ஆலையில் 1,500-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். நேற்று காலை ஆலையில் இருந்து அதிகளவு ரசாயன புகை வெளியேறியது. இதனால் ஆலையைச் சுற்றி வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ரசாயன ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டிஎஸ்பி வினோஜி, வட்டாட்சியர் அந்தோணிராஜ், இன்ஸ்பெக்டர் தேவிகா உள்ளிட்டோர் ஆலை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் கிராம மக்களை சமாதானம் செய்தனர்.
இதுகுறித்து கோவிலூரைச் சேர்ந்த முனியசாமி, போதும் பொண்ணு கூறியதாவது: ஏற் கெனவே 5 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் நச்சுப்புகை வெளியேறி பலர் பாதிக்கப்பட்டனர். இப்பகுதியில் வாழவே அச்சமாக உள்ளது. ஆலையை மூடக்கோரி போராடியும் பயனில்லை.
மேலும் ஆலை 24 மணி நேரமும் இயங்குவதால் இயந்திரங்கள் பராமரிப்பின்றி அடிக்கடி உடைந்து நச்சுப்புகை வெளியேறுகிறது. இதனால் ஆலையை மாதத்துக்கு ஒருமுறை முழுமையாக நிறுத்தி பராமரிப்பு செய்ய வேண்டும். நச்சுப் புகை பாதிப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.