காஞ்சிபுரத்தில் தேமுதிக மாநாடு தமிழகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும்: பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை

காஞ்சிபுரத்தில் தேமுதிக மாநாடு தமிழகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும்: பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை
Updated on
1 min read

தேமுதிக சார்பில் காஞ்சிபுரத்தில் 20-ம் தேதி நடைபெற உள்ள மாநாடு, தமிழகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அக்கட்சியின் மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தேமுதிகவின் திருப்புமுனை மாநாடு என்ற தலைப்பில் காஞ்சி புரம் அடுத்த வேடல் பகுதியில் வரும் 20-ம் தேதி தேமுதிக மாநாடு நடத்துகிறது. அதற்கான பணிகள் அங்கு நடைபெற்று வருகின்றன. அதை பிரேமலதா நேற்று பார்வையிட்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

20-ம் தேதி நடைபெற உள்ள மாநாட்டுக்காக, இங்கு சுமார் 270 ஏக்கர் பரப்பளவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநாட்டுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தேன்.

தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் அறிஞர் அண்ணா. அவர் பிறந்த மண்ணில் மாநாடு நடத்த இருக்கிறோம். அந்த மாநாடு தமிழகத்தில் நிச்சயம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும்.

திமுக- காங்கிரஸ் கூட்டணி பிற்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்பட்டது. 12.30 மணிக்கே சமூக வலைத்தளங்களில், கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற ஊழல்களுக்கு அவர்கள்தான் காரணம் என்று விமர்சனங்கள் வந்துள்ளன.

அனைத்து கட்சிகளும், தேமுதிகவுடன் கூட்டணி வைக்க அழைப்பு விடுத்துள்ளன. அக்கட்சிகளுக்கு நாங்கள் நன்றி தெரிவித்திருக்கிறோம். ஊழல் இல்லாத, நேர்மையான, நல்லாட்சியை தமிழக மக்களுக்கு கொடுப்பதில் உறுதியாக இருக்கிறோம். அந்த வகையில் கூட்டணி அமைப்போம்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மத்திய அரசு வழங்கிய நிதி, நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசின் பங்கு எதுவும் இல்லை. இது மக்களுக்கு தெரியும். மக்கள் சந்திக்க முடியாத முதல்வராக ஜெயலலிதா உள்ளார். அவருக்கு வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவர் என்றார்.

செங்கல்பட்டு தொகுதி தேமுதிக எம்எல்ஏ அனகை முருகேசன் உடனிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in