

சட்டப்பேரவை தேர்தலை முன் னிட்டு தமிழகம் முழுவதும் ரவுடி களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலில் வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க குற்றப் பதிவேட்டில் உள்ள ரவுடிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக கைது செய்து சிறையில் அடைப்பது வழக்கம். இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
234 தொகுதிகளிலும் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்தும், அங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் நபர்கள் குறித்தும் பட்டியல் தயார் செய்து அறிக்கை அளிக்குமாறு டிஜிபி அலுவ லகத்தில் இருந்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தேர்தலை அமைதியாக நடத்தி முடிப்பதற்கான பணிகளில் தமிழக காவல் துறை இறங்கியுள்ளது. மே மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க டிஜிபி அலுவலகத்தில் தனியாக தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைப்பது வழக்கம். ஒரு ஐ.ஜி தலைமையில், ஒரு எஸ்.பி, 2 கூடுதல் எஸ்.பி.க்கள், 2 டிஎஸ்பிக்கள், 6 இன்ஸ்பெக்டர்கள் இந்த கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிவார்கள். இது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை டிஜிபி அலுவலகத்தில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் டிஜிபி ஒருவரையும் தேர்தல் ஆணையம் நியமிக்கும். அதன் பின்னரே தேர்தல் கட்டுப்பாட்டு அறை முழுமையாக செயல்பட தொடங்கும். வாக்குச்சாவடிகள் எண் ணிக்கை, பதற்றமான வாக்குச் சாவடிகள், பாதுகாப்பு பணிக்கு எவ்வளவு போலீஸார் தேவை, மத்திய துணை ராணுவப்படை, மாநில போலீஸார், ஊர்க்காவல் படை, இளைஞர் காவல் படை போன்ற பிரிவுகளை எங்கெங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது போன்றவை குறித்து முடிவு செய்துவிட்டோம்.
ரவுடிகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கிவிட்டது. பிரச் சினைக்குரிய ரவுடிகள் மீது இந்திய குற்றவியல் தடுப்பு சட்டம் 110-வது விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் அவர்களை கைது செய்யவும் முடியும். பிரச் சினை செய்வார்கள் என சந்தேகப் படும் நபர்களை நேரில் அழைத்து விசாரிப்போம். 'வன்முறையில் ஈடுபட மாட்டேன்' என அவரிடம் எழுத்துப்பூர்வமாக எழுதியும் வாங்குவோம். சில ரவுடிகள் தேர்தல் முடியும் வரை ஊருக்குள் வருவதற்கும் தடை விதிப்போம். அவர்கள் விதியை மீறி செயல் பட்டால் கைது செய்வோம். குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.