

களம்பூர் அருகே மின்கம்பியை மிதித்த பசு மாட்டை காப்பாற்றச் சென்ற முதியவர் உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் அருகே யுள்ள மலையம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பெருமாள் (70). இவருக்கு, தேவகி என்ற மனைவியும், காஞ்சனா, ஈஸ்வரி என்ற மகள்கள் உள்ளனர். மகள்கள் இரு வருக்கும் திருமணமாகி விட்டது. சிவா என்ற மகன் கடந்த5 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். மலையம்பட்டு கிராமத்தில் மனைவியுடன் பெருமாள் வசித்து வந்தார்.
இந்நிலையில், பெருமாள் தனது பசு மாட்டை மேய்ச்சலுக்காக அருகே உள்ள ஏரி பகுதிக்கு நேற்று காலை ஓட்டிச் சென்றார். அப்போது, விவசாய நிலத்தில் அறுந்து கீழே விழுந்திருந்த மின் கம்பியை மிதித்து மாடு சுருண்டு விழுந்தது. அதிர்ச்சியில் மாட்டை காப்பாற்றச் சென்ற பெருமாளும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். பெருமாளின் சத்தம் கேட்டு ஓடிச்சென்று சிலர் பார்த்தபோது மின்சாரம் பாய்ந்து பசு மாட்டுடன் பெருமாள் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் மின்சாரம் உடனடி யாக துண்டிக்கப்பட்டது. தகவலறிந்த களம்பூர் காவல் துறையினர் பெருமாளின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக களம்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.