

குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற தனது தாயாரை வீட்டில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்துவதாகவும், அவரை மீட்க வலியுறுத்தியும் 14 வயதுச் சிறுமி தனது பாட்டியுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
காரைக்குடி அருகே வேப்பங்குளத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், இவரது மனைவி சித்ரா (46), மகள் கீர்த்தனா (14) இருவரும் வறுமையில் சிரமப்பட்டனர். இதையடுத்து 4 ஆண்டுகளுக்கு முன்பு கீர்த்தனாவைத் தனது தாயார் அழகம்மாளிடம் (80) விட்டுவிட்டு உறவினர் உதவியால் குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு சித்ரா சென்றார்.
அங்கு சம்பாரித்த பணத்தை அவ்வப்போது வீட்டிற்கு அனுப்பி வந்துள்ளார். ஆனால் சில மாதங்களாக வீட்டு உரிமையாளர் சித்ராவை வீட்டில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தி வருகிறாராம். மேலும் தனது மகளிடம் பேசவிடாமல் தடுத்து வருகிறாராம். இதுகுறித்து சித்ராவோடு பணிபுரியும் ஊழியர் ஒருவர், கீர்த்தனாவிற்கு மொபைலில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தனது தாயாரை மீட்டு ஊருக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கீர்த்தனா தனது பாட்டியுடன் வந்து சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
விமான நிலையத்தில் மாயம்:
இளையான்குடி அருகே பகைவரைவென்றானைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் ஆண்டி (42). இவரது மனைவி கவிதா (32). இவர்களது குழந்தைகள் கேசவ அஸ்வின் (10), ரக்சியா (8). இந்நிலையில் குடும்ப வறுமை காரணமாக 3 ஆண்டுகளுக்கு முன்பு கடனை வாங்கிக்கொண்டு மலேசியாவுக்கு ஜெயக்குமார் ஆண்டி சென்றார். அங்கு கொத்தனார் வேலை பார்த்து வந்தார். கரோனா ஊரடங்கால் வேலையின்றி, ஊருக்குத் திரும்பப் பணமில்லாமல் தவித்தார்.
அவரது மனைவி கவிதா, ஊர் திரும்புவதற்காக ரூ.40 ஆயிரத்தை ஜெயக்குமார் ஆண்டிக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து ஊருக்கு வருவதற்காக ஜூலை 21-ம் தேதி கோலாலம்பூர் விமான நிலையத்திற்கு வந்தபோது திடீரென மாயமானார். ஒருவாரமாகியும் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
இதையடுத்து எனது கணவரை மீட்டு ஊருக்கு அழைத்து வர வேண்டுமென கவிதா தனது குழந்தைகளுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.