

மேட்டுப்பாளையம் வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் சுற்றி வரும் காட்டு யானைக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணியை வனத்துறையினர் தற்காலிகமாகக் கைவிட்டுள்ளனர்.
கோவை, மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி, இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதியில் காட்டு யானை ஒன்று சுற்றி வருகிறது. அதன் திடகாத்திரமான உடல்வாகு காரணமாக அப்பகுதி மக்கள் 'பாகுபலி' என அந்த யானைக்குப் பெயரிட்டு அழைத்து வருகிறார்கள். இந்த யானை இதுவரை மனிதர்கள் யாரையும் தாக்கவில்லை என்றாலும், உணவுக்காகக் கடந்த 6 மாதங்களாக விளைநிலங்களுக்குள் நுழைந்து வருகிறது.
இந்நிலையில், யானைக்கு ரேடியோ காலர் பொருத்தி அதன் நடமாட்டத்தைக் கண்காணிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காகப் பொள்ளாச்சி டாப்சிலிப் வளர்ப்பு யானைகள் முகாமில் இருந்து கலீம், மாரியப்பன், வெங்கடேஷ் ஆகிய 3 கும்கி யானைகள் கடந்த மாதம் வரவழைக்கப்பட்டன. இந்த யானைகளின் உதவியுடன் கால்நடை மருத்துவக் குழுவினர் மற்றும் மேட்டுப்பாளையம், சிறுமுகை வனத்துறையினர் இணைந்து யானைக்கு ரேடியோ காலர் பொருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஜூன் 28-ம் தேதி தொடங்கினர். இந்நிலையில், இந்தப் பணிகள் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் து.வெங்கடேஷ் கூறும்போது, ''கண்காணிப்பின்போது மனிதர்கள் நடமாட்டம் இருப்பதைத் தெரிந்துகொள்ளும் அந்த யானை, உடனடியாக இடத்தை மாற்றிக்கொள்கிறது. எனவே, யானை தனது வழக்கமான நடவடிக்கைகளுக்குத் திரும்ப ஏதுவாக ரேடியாக காலர் பொருத்தும் பணி தற்காலிகமாகக் கைவிடப்படுகிறது. மேலும், யானை தற்போது உள்ள நெல்லித்துறை வனப்பகுதியில், ரேடியோ காலர் பொருத்த ஏதுவான இடம் இல்லை.
இந்தப் பணிக்காக கும்கி யானைகள் இங்கு அழைத்து வரப்பட்டு ஒரு மாதம் ஆகிறது. எனவே, அவற்றுக்குப் புத்துணர்வு அளிக்க, மீண்டும் அவை டாப்சிலிப் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. யானைக்கு ரேடியோ காலர் பொருத்த ஏதுவான இடம், காலம் அமையும்போது அந்தப் பணிகள் மீண்டும் தொடங்கும்'' என்று தெரிவித்தார்.