Published : 28 Jul 2021 05:25 PM
Last Updated : 28 Jul 2021 05:25 PM

கோவை, திருப்பூர், சுற்றுவட்டார மாவட்டங்களில் சிறு, குறு தொழில்களைப் பாதுகாக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலினுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

கோவை, திருப்பூர், சுற்றுவட்டார மாவட்டங்களில் சிறு, குறு தொழில்களைப் பாதுகாக்க வலியுறுத்தி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (ஜூலை 28) முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம்:

"கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள், பவர்லூம் தொழில் உள்ளிட்ட ஜவுளித் தொழில்களை மேற்கொள்ளும் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

இந்தியாவில் மோட்டார் பம்ப் உற்பத்தியில் 50 சதவிகிதம் உற்பத்தி கோவையில் செய்யப்படுகிறது. இத்தகைய தொழில் நிறுவனங்களோடு காற்றாலை, ரைஸ்மில், தேங்காய் களம், கோழிப்பண்ணை, செங்கல் சூளை ஆகிய பல்வேறு தொழில்களும் இயங்கி வருகின்றன. இந்நிறுவனங்கள் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதோடு, அரசுக்கும் கோடிக்கணக்கான வரி வருவாயையும் அளித்து வருகிறது.

குறிப்பாக, திருப்பூர் நகரம் பனியன் தொழிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு உற்பத்தியில் சுமார் ரூ 50,000 கோடி வரை வர்த்தகம் நடைபெறும் தொழில் மையமாக உள்ளது. மொத்த இந்தியாவின் கார்மெண்ட்ஸ் உற்பத்தியில் 52 சதவிகித அளவுக்கு திருப்பூர் பங்களிப்பு செலுத்துகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் 6 லட்சம் தொழிலாளர்கள் இத்தொழிலில் பணிபுரிகின்றனர். பெருமளவிலான கிராமப்புறப் பெண்களும் இந்நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள்.

தமிழகத்தின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான பங்களிப்பைச் செய்து வரும் இத்தகைய தொழில் நிறுவனங்களின் தற்போதைய கோரிக்கைகளை நிறைவேற்றவும், தொழில் மற்றும் தொழிலாளர்கள் நலன்களைப் பாதுகாக்கவுமான வகையில், கீழ்க்கண்ட முக்கிய அம்சங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தங்களில் மேலான கவனத்துக்குக் கொண்டுவர விரும்புவதோடு, அவற்றை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

1. தொழில் நிறுவனங்கள் தொடர்பான கோரிக்கைகள்

அ. சிறு, குறு தொழில்களுக்கு தற்போது அமலில் உள்ள பல்வேறு கடன் திட்டங்கள் முறையாகக் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கரோனா ஊரடங்கு போன்ற காலங்களில் ஏற்கெனவே பெற்றுள்ள கடன்களைத் திரும்பச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பதுடன் கடனுக்கான வட்டி தள்ளுபடி போன்றவற்றையும் அறிவிக்க வேண்டும்.

ஆ. பனியன் தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியினை பிரிவு வாரியாக விதிப்பதைத் தவிர்த்து தொழிலை பாதிக்காத வகையில் வரிவிதிப்புக் கொள்கை கையாளப்பட வேண்டும். அவ்வப்போது ஏற்ற இறக்கமாக உள்ள நூல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதோடு, விலையில் ஒரு நிலையான தன்மையை உருவாக்க வேண்டும்.

இதற்கென பிரத்யேகமாக CCI போன்று மாநில அளவிலான 'தமிழ்நாடு பருத்தி வாரியம்' அமைக்கப்பட வேண்டும். பின்னலாடைத் துறைக்கு பிரத்யேக ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து ஒருங்கிணைந்த மத்தியப் பல்கலைக்கழகத்தின் விரிவு மையத்தை (CENTRAL UNIVERSITY EXTN CENTRE FOR MORDEN TEXTILE INDUSTRY) திருப்பூரில் உருவாக்க மாநில அரசு முயன்று, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

இ. திருப்பூர் சுற்றுப்புறச்சூழல் பாதிக்காத வகையில் சாயப்பட்டறைக் கழிவுகளை அகற்றும் வகையில் மத்தியப்படுத்தப்பட்ட சுத்திகரிப்பு நிலையங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும். தற்போது பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்குப் போடப்பட்டுள்ள 12 சதவிகித ஜிஎஸ்டியை 5 சதவிகிதமாகக் குறைப்பதற்கான வகையில் தமிழக அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

ஈ. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தாலுக்கா வணிகவரி மண்டலங்கள் ஈரோடு, கோவை, கரூர் மாவட்டங்களில் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், பல்வேறு இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன. எனவே, திருப்பூர் மாவட்டத்தை மையப்படுத்தி வணிகவரி மண்டலம் அமைப்பது பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண உதவியாக அமையும்.

உ. சிட்கோ, தாட்கோ தொழிற்பேட்டைகளில் தகுதி வாய்ந்த தொழில் முனைவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அந்த மையங்களில் உற்பத்தியாகும் பொருட்களை அரசே தேவையான அளவு கொள்முதல் செய்ய உரிய நிர்வாக ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும். டிக் (TIIC) மூலம் புதிய படித்த வேலை தேடும் சுய தொழில்முனைவோருக்கு சலுகைகளோடு கூடிய கடனுதவித் திட்டங்களையும் அமலாக்கிட வேண்டும்

ஊ. கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் தடுப்பூசிகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு உள்ளதால், சிறு - குறு தொழில்கள் இயங்கிவரும் பகுதிகளைக் கண்டறிந்து தொழிற்சாலை வளாகங்களிலேயே தொழிலாளர்களுக்குத் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும்.

கரோனா தடுப்பு வழிகாட்டும் விதிகளை மீறும் காரணத்தால் பல்வேறு இடங்களில் கடுமையான முறையில் அபராதம் விதித்து, அச்சுறுத்தும் போக்கைக் கைவிடச் செய்து, அரசாங்கத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்திட வேண்டும்.

2. தொழிலாளர் நலன் சார்ந்த கோரிக்கைகள்

அ. கோவையில் அரசு அமைத்துள்ள சுந்தராபுரம் சிப்காட் கட்டமைப்பு வசதிகள் மிக மோசமாக உள்ளது. இதனை மேம்படுத்திட வேண்டும். அதேபோல், தொழில் அமைப்புகள் உருவாக்கியுள்ள தொழிற்பேட்டைகளில் அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்.

ஆ. கோவை சிறு தொழில் உரிமையாளர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சினையே மூலப் பொருட்களின் மிகக் கூடுதலான விலை உயர்வு தொழிலை கடுமையாக பாதிக்கிறது. மூலப்பொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இ. மின்சாரக் கட்டண விவரம் குறிப்பாக, கோவிட் காலத்துக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

ஈ. புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அரசு நிர்வாகத்திலும், வேலை வாங்குவோரும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

உ. தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், அனைத்துப் பிரிவு தொழிலாளர்களின் அன்றாட வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான முறையில் சட்ட ரீதியான உரிமைகள் பலப்படுத்தப்பட வேண்டும். சமவேலைக்குச் சம ஊதியம் வழங்கப்பட வேண்டும். தொழிலாளர் நலத்துறை மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை அனைத்துத் துறை தொழிலாளர்களுக்கும் வழங்கப்படுவதைத் தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும்.

ஊ. இன்று புதிது, புதிதாக பல்வேறு நோய்கள் உருவான வண்ணம் உள்ள நிலையில், தொழிலாளர்கள் தங்கள் உழைப்பின் பெரும் பகுதி ஊதியத்தை மருத்துவத்திற்கே செலவழிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இஎஸ்ஐ திட்டத்தில் இணைந்து பணம் செலுத்தி வருகின்றனர். ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வரை இஎஸ்ஐக்கு தொழிலாளர்களின் பணம் செல்லும் நிலையில், தொழிலாளர்களுக்குப் பயன்படும் வகையில் கூடுதலாக ஒரு இஎஸ்ஐ மருத்துவமனையை திருப்பூரில் கட்டித்தர உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

அத்தகைய ஒரு மருத்துவமனை கட்டப்படுவதாக அறிவிப்பும் வெளியிட்டு, பிரதமர் அடிக்கல் நாட்டி ஆண்டுகள் பல கடந்துவிட்ட நிலையில், மேலும் காலம் தாழ்த்தாமல் அனைத்துவிதமான உயர் அதிநவீன வசதிகளோடு கூடிய இஎஸ்ஐமருத்துவமனையை, கூடுதல் படுக்கைகள் வசதிகளோடு கட்டித்தர வேண்டும்.

எ. இஎஸ்ஐ உயர் சிகிச்சைக்கான ஒப்புதல் பெற ஏற்கெனவே மண்டல அலுவலகம் கோவையில் இருந்தபோது திருப்பூரிலிருந்து செல்வது உதவியாக இருந்தது. தற்போது தமிழகத்தில் 7 மண்டலமாக இஎஸ்ஐ பிரிக்கப்பட்டு சேலம் மண்டலத்தில் திருப்பூர் இணைக்கப்பட்டது பொருத்தமற்றது. திருப்பூரில் மட்டும் 5 லட்சம் பேர் இஎஸ்ஐயில் உள்ளபோது, திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு மண்டல மைய அலுவலகம் அமைக்கப்பட வேண்டும்.

ஏ. புலம் பெயர்ந்து வேலை தேடி வரும் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கான அடையாள அட்டை, உரிய சம்பளம், பாதுகாப்பான தங்குமிடம் போன்றவற்றில் அரசு கவனம் செலுத்த வேண்டும். 1976-ல் இதற்காக கொண்டுவரப்பட்ட புலம் பெயர்ந்தோருக்கான சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஐ. திறன் வாய்ந்த தொழிலாளர்கள் அதிகத் தேவையுள்ள கோவை மற்றும் திருப்பூரில் தொழில் சார்ந்த பயிற்சி நிலையங்கள், திருப்பூரில் அரசு பொறியியல் கல்லூரி, ஆயத்த ஆடை ஆராய்ச்சி அமைப்பு, தொழில் சார்ந்த நோய்களுக்கான சிறப்பு மருத்துவ வசதிகள் என பிரத்யேகக் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

இம்மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் தொழில்நுட்பம் சார்ந்து உயர் கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும். பொழுதுபோக்கு அம்சங்களைக் கணக்கில் கொண்டு நிரந்த விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு மையங்கள் உருவாக்கிட அரசு கூடுதல் நிதியை ஒதுக்கிட வேண்டும்.

ஒ. தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் வேகமான நகரமயமாக்கலால் கோவை மற்றும் திருப்பூரில் தொழிலாளர்களுக்கான வசிப்பிடம் என்பது மிகப்பெரும் பிரச்சினையாக வளர்ந்து வருகிறது. எனவே, தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றும் வகையில் தொழிலாளர்களுக்கான அடுக்குமாக் குடியிருப்புகளைக் கட்டுதல், உழைக்கும் மகளிர் விடுதிகளை தேவைக்கேற்றன் அளவில் அரசே உருவாக்க வேண்டும்.

3. கட்டமைப்பு மேம்பாடு கோரிக்கைகள்

அ. தொழில் நிறுவனங்கள் நிறைந்துள்ள இப்பகுதிகளில் நாள்தோறும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும், மக்களும் பெரும்பாலும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி வரும் நிலையில், அதற்கான கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். குறிப்பாக, கோவையிலிருந்து திருப்பூருக்கும், மேட்டுப்பாளையத்திற்கும், பொள்ளாச்சிக்கும் இடையேயான வழித்தடங்களில் கூடுதலான ரயில்களை இயக்குவது அவசியம். எனவே, மத்திய அரசிடம் இக்கோரிக்கையை தமிழக அரசு வலியுறுத்திப் பெற வேண்டும்.

ஆ. சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படாத வகையில், சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்துதல், குடிநீர் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுதல், திடக்கழிவு மேலாண்மை மற்றும் பாதாள சாக்கடை திட்டங்கள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புத் தேவைகளையும் முழுமையாக மேம்படுத்திட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.

மேற்குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளைத் தமிழக அரசு, உரிய முறையில் பரிசீலிப்பதோடு, கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்".

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x