புதுச்சேரியில் அதிநவீன கருவிகள் அடங்கிய மிதவை கடலில் அமைப்பு: கடல் நீரின் தரத்தை இணையத்தில் அறிய வசதி

புதுச்சேரியில் அதிநவீன கருவிகள் அடங்கிய மிதவை கடலில் அமைப்பு: கடல் நீரின் தரத்தை இணையத்தில் அறிய வசதி
Updated on
2 min read

கடல் நீரின் தன்மையை அறிய சென்னையைத் தொடர்ந்து புதுச்சேரியில் அதிநவீன கருவிகள் அடங்கிய மிதவை கடலில் அமைக்கப்பட்டுள்ளது. இணையத்தில் மட்டுமில்லாமல் செல்போனிலும் இதன் விவரங்களை விரைவில் அறியலாம்.

மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் (nccr) கடல் நீரின் தன்மையை அறியும் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. புதுச்சேரியில் கடல் நீரின் தன்மையை அறிய அதிநவீன கருவிகள் பொருத்திய மிதவையைப் புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் கடலில் நிறுவியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் புதுச்சேரி கடலோரப் பகுதி நீரின் தன்மையும் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படும். இதனால் கடல் மாசுபடுவதைத் தடுக்க திட்டமிடலாம். மீன்வளம் மற்றும் கடலோர சுற்றுலா வளர்ச்சி திட்டங்களுக்குத் தகவல்களைப் பெற முடியும்.

இத்திட்டம் இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது. புதுச்சேரி கடலில் நிறுவப்பட்டுள்ள மிதவையில் இருந்து பெறப்படும் தகவல்களை தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தின் இணையத்தின் வாயிலாக முதல்வர் ரங்கசாமி பார்வையிட்டார்.

இது தொடர்பாக அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுசூழல்துறை இயக்குநர் தினேஷ் கண்ணன் கூறுகையில், "கிழக்கு கடற்கரையில் கடல் நீர் தன்மை அறிய இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் மிதவை ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து புதுச்சேரியில் இரண்டாவது மிதவை அமைக்கப்பட்டுள்ளது.

கடல் தண்ணீரின் தரம், காற்றின் தன்மை உட்பட பல விஷயங்களைப் பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை நமக்குத் தரும். அதை தேசிய கடலோர ஆராய்ச்சி மைய இணையத்தில் பார்க்கலாம். அத்துடன் கடல் நீரின் தரத்தை வண்ணங்கள் மூலம் அறியும் வசதியுண்டு. பச்சை நிறத்தில் இருந்தால் அது சரியாக உள்ளதாக அர்த்தம். வெவ்வேறு வகை வண்ணங்கள் மாறி சிவப்பு நிறத்தில் இருந்தால் தரம் குறைந்துள்ளதாக அறியலாம்.

இத்தகவல்கள் மீனவர்களுக்குத் தண்ணீரின் ஓட்டம், காற்றின் தன்மை, மீன்கள் இருக்கும் இடம் ஆகியவற்றையும் அறியலாம். சுற்றுலாப் பயணிகளுக்கும் இம்மிதவை தகவல்களால் பலன் உண்டு. அது நடைமுறைக்கு வர சில காலம் ஆகும். கடல் நீர் தரமாக உள்ளதா என அறிந்து சுற்றுலாப் பயணிகள் கடற்கரையில் இறங்கலாம். இதை மொபைல் அப்ளிகேஷன் மூலம் அறிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

சென்னையின் சில இடங்களில் கடல் நீரின் தரம் சிவப்பு வண்ணத்தைக் காட்டுவதை இணையப் பக்கத்திலேயே அறிய முடியும். புதுச்சேரியில் துறைமுகத்தில் மிதவை உள்ள பகுதியிலிருந்து தற்போது இரு கி.மீ. தொலைவு வரை தற்போது தகவல்களை மிதவை தரும்.

தற்போது நாங்கள் தண்ணீரை எடுத்துப் பரிசோதித்து வரும் முடிவுகளையும், மிதவை தரும் முடிவுகளையும் ஒப்பிட்டுப் பார்ப்போம். குறிப்பிட்ட காலம் வரை முடிவுகள் சரியாக இருந்தால் மக்கள் அறிய வெளியிடத் தொடங்குவோம். இதன் மூலம் கிழக்கு கடற்கரையில் குளிக்கும் தரம் கடலில் எங்குள்ளது என்பதை அறியலாம்" என்று குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in