

தமிழக அரசிடமிருந்து 104 ஏக்கர் நிலத்தைப் பெற்று புதுச்சேரி விமான நிலைய ஓடுதளத்தை 3330 மீட்டராக விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம். விரைவில் தமிழக முதல்வரை சந்திக்க உள்ளோம் என்று புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.
புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத், பெங்களூரூ, சேலம், கொச்சின் நகரங்களுக்கு விமான சேவையை செயல்படுத்த ஆறு நிறுவனங்கள் கோரியிருந்தன. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.
புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது பற்றி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது. ஓடுதள விரிவாக்கத்துக்கு நிலம் ஆர்ஜிதம் செய்வது, தமிழக பகுதியில் நிலம் எடுப்பதில் உள்ள பிரச்சினைகள் மற்றும் விமான நிலைய விரிவாக்கத்துக்கு கூடுதல் இடம் கையகப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக பேசினர்.
கூட்டத்தில், விமான நிலைய இயக்குனர் விஜய் உபாத்யா, சுற்றுலாத்துறை செயலர் விக்ராந்த்ராஜா, தொகுதி எம்எல்ஏ கல்யாணசுந்தரம், சுற்றுலாத்துறை இயக்குனர் பிரியதர்ஷினி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பிறகு கையகப்படுத்த வேண்டிய பகுதிகளை பார்வையிட்டு இன்று ஆய்வு செய்தனர்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறியதாவது:
"விமான நிலைய ஓடுதளத்தை விரிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது. தமிழகத்தில் முதல்கட்டமாக 104 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்ய திட்டமிட்டுள்ளோம். விழுப்புரம் ஆட்சியர், விழுப்புரம் எம்.பி.யை அழைத்துப் பேச உள்ளோம். தேவைப்படும் நில வரைபடத்தை புதுவை அதிகாரிகள் தயாரித்து அவர்களிடம் வழங்குவார்கள்.
ஏற்கெனவே தமிழக முதல்வர் ஸ்டாலினை துணைநிலை ஆளுநர் தமிழிசை சந்தித்து நிலம் ஒதுக்கக் கோரியுள்ளார். அனைத்து ஆவணங்கøளை தயாரித்து நாங்களும் தமிழக முதல்வரை சந்தித்து இடம் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துவோம். தமிழக அரசிடமிருந்து நிலம் கிடைத்தால் தற்போதைய ஆயிரத்து 502 மீட்டர் ஓடுதள பாதையை 3 ஆயிரத்து 330 மீட்டர் ஓடுதளமாக மாற்ற திட்டமிட்டுள்ளோம்.
தற்போதுள்ள ஓடுதளத்தின் மூலம் இரவு நேரத்திலும் விமானங்களை இயக்க முடியும். இதற்காக தற்காலிக அனுமதி பெற உள்ளோம். புதுவையில் உள்ள 40 அடி இடத்தை விமான நிலையத்துக்கு கையகப்படுத்தி, தற்போதைய ஓடுதளத்தை அகலமாக்கினால் போதும். தற்காலிக உரிமம் பெற்று இரவு நேரத்தில் விமானங்கள் இயக்கப்படும். உயரமான மரங்களை அகற்றுவது, விளம்பரப் பலகைகளை அகற்றும் பணி விரைவில் தொடங்கப்படும்.
புதுவையிலிருந்து விமானத்தை இயக்க ஆறு விமான நிறுவனங்கள் தயாராக உள்ளனர். ஐதரபாத், பெங்களுரூக்கு விமானங்கள் இயக்கப்பட்டது. புதிதாக விமான சேவையை தொடங்க விரும்புவோர் சேலம், கொச்சின் ஆகிய நகரங்களுக்கு விமானங்களை இயக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கரோனா தொற்று குறைந்துள்ளதால் மீண்டும் விமான சேவையை தொடங்க சம்பந்தபட்ட நிறுவனங்களை அழைத்துளோம். விமான சேவை நிறுவனங்கள் விரைவில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி விமான சேவையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
தற்போதைய பணிகள் நிறைவடைந்தவுடன் எதிர்காலத் திட்டத்தைக் கருத்தில் கொண்டு இரண்டாம் கட்டமாக தமிழக அரசிடம் 217 ஏக்கர் நிலத்தை விமான நிலைய விரிவாக்கத்துக்காக கேட்போம். அந்நிலங்களை வழங்கினால், விமானங்கள் நின்று செல்லும் வசதியும் உருவாக்கப்படும்" என்று குறிப்பிட்டார்.