Published : 28 Jul 2021 03:15 AM
Last Updated : 28 Jul 2021 03:15 AM

கோயில் உழவாரப் பணிக்கு இணையவழியில் பதிவு: புதிய வசதியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

கோயில்களில் பக்தர்கள் உழவாரப் பணிகளை மேற்கொள்ள இணைய வழியில் பதிவு செய்யும் வசதியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தொடங்கி வைத்தார். உடன் சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர்.படம்: பு.க.பிரவீன்

சென்னை

கோயில்களில் உழவாரப் பணி செய்ய விரும்பும் பக்தர்கள், இந்துசமய அறநிலையத் துறையின் http://hrce.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அறநிலையத் துறை ஆணையர் அலுவலக கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் துறை அமைச்சர் சேகர்பாபு இதைதொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன், அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:

முதல்கட்டமாக, தமிழகத்தின் 47 பெரிய கோயில்களில் உழவாரப் பணி செய்ய இணையதளம் வழியாக பக்தர்கள் பதிவு செய்யும் வசதிதொடங்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் இ-சேவைகள் - உழவாரப்பணி பகுதியில் விருப்பப்பட்ட கோயிலைத் தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்து, பணிகளை பக்தர்கள் மேற்கொள்ளலாம்.

மாநிலம் முழுவதும் உள்ள 36 ஆயிரம் கோயில்களில், 12 ஆயிரம்கோயில்களில் ஒருகால பூஜை நடக்கிறது. அனைத்து கோயில்களிலும் அபிஷேகம், பூஜை நடக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்.ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குயாரை அறங்காவலர் குழு தலைவராக நியமித்தால் கோயில் வளர்ச்சிப்பணிகள் நடைபெறுமோ, அவர்தான் நியமிக்கப்படுவார். தமிழகத்தை சேர்ந்த இந்து ஒருவர்தான் நியமிக்கப்படுவார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி 2 பேர்அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது அர்ச்சகர், ஓதுவார்,மடப்பள்ளி ஊழியர், தவில் வாசிப்பவர் உட்பட பல்வேறு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆகமப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் சிறிய கோயில்களில் அர்ச்சகராக நியமிக்கப்படுவார்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தில், பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு 100 நாட்களுக்குள் நியமன ஆணை வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x