எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் தொடர்புடைய தனியார் ஆலோசகர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்திய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய தனியார் நிறுவன ஆலோசகரின் சென்னை அண்ணா நகர் அலுவலகம்.படம்: ம.பிரபு
லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்திய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய தனியார் நிறுவன ஆலோசகரின் சென்னை அண்ணா நகர் அலுவலகம்.படம்: ம.பிரபு
Updated on
1 min read

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ் கருடன் தொடர்புடைய தனியார் நிறுவன ஆலோசகரின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத் துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர். இவர், அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோர் மீது சொத்துக் குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 22-ம் தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கரின் கரூர் வீடு, சென்னையில் உள்ள வீடு மற்றும் அவரது உறவினர்கள், அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் உட்பட தமிழகம் முழுவதும் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ரூ.25 லட்சத்து 56 ஆயிரம் ரொக்கம், சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக 55 சதவீதம் சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், சென்னை அண்ணாநகர் 6-வது அவென்யூ எஸ் பிளாக்கில் உள்ள விஜயபாஸ்கருடன் தொடர்புடைய எஸ்.ரவிக்குமார் என்பவருக்கு சொந்தமான அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி, ஜிபிஎஸ் கருவிகள், ஸ்டிக்கர் மற்றும் பல்வேறு உதிரி பாகங்கள் வாங்கிய தனியார் நிறுவனம் ஒன்றின் ஆலோசகராகவும், தரகராகவும் ரவிக்குமார் செயல்பட்டுள்ளார். இவற்றை வாங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ரவிக்குமார் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பல மணி நேரம் நடந்த இந்த சோதனையில், வழக்குத் தொடர்பாக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அதுகுறித்த விபரங்களை தற்போது வெளியிட இயலாது என லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in