Published : 28 Jul 2021 03:15 AM
Last Updated : 28 Jul 2021 03:15 AM

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 6-வது நினைவு தினம்: பேக்கரும்பு நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி

ராமேசுவரம் பேக்கரும்பில் அமைந்துள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தும் அதிகாரிகள் மற்றும் உறவினர்கள். படம்: எல்.பாலச்சந்தர்

ராமேசுவரம்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ராமேசுவரத்தில் அவரது நினைவிடத்தில் நேற்று திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.

ராமேசுவரம் பேக்கரும்பு அப்துல் கலாம் நினைவிடத்தில் கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாபுதீன், மகள் நசிமா மரைக்காயர், பேரன்கள், மற்றும் குடும்பத்தினர் இஸ்லாமிய முறைப்படி சிறப்பு தொழுகை செய்தனர்.

இதில் அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்றனர். அரசு சார்பில் ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா, ராமநாதபுரம் சரக டிஐஜி மயில்வாகனன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசகர் பொன்ராஜ், மத்திய கயிறு வாரியத் தலைவர் குப்புராமு, முன்னாள் ராமநாதபுரம் எம்பி அன்வர்ராஜா, ராமநாதபுரம் எம்எல்ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், நடிகர் தாமு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கலாமின் அண்ணன் பேரன் ஷேக்சலீம் கூறியதாவது: பேக்கரும்பில் கலாமின் தேசிய நினைவகம் விரிவாக்கப்படும் என மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு முன்புஅறிவித்தது. இதில் அறிவுசார் மையம், டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கரோனா பரவல் காரணமாக அப்பணிகள் முற்றிலும் தடைப்பட்டுள்ளன. மத்திய அரசு விரைவில் விரிவாக்கப் பணிகளை தொடங்க வேண்டும் என்றார்.

கரோனா கட்டுப்பாடால் நேற்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் மட்டும் கலாம் நினைவகத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு, அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில் www.apjabdulkalamfoundation.org இணையதளம் மூலம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதில், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்தவிஞ்ஞானி சிவதாணு பிள்ளைஆகியோர் கலாமின் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x