

காஷ்மீர் மாநிலம், லடாக் அருகே கடந்த புதன்கிழமை கடும் பனிச் சரிவு ஏற்பட்டது. இதில் அப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இந்திய ராணுவ முகாமை பனிப் பாறைகள் மூடியதில் 10 ராணுவ வீரர்கள் இறந்தனர். இவர்களில் 4 பேர் மதுரை, தேனி, திருவண்ணா மலை மற்றும் ஓசூரைச் சேர்ந்தவர் கள் எனத் தகவல் வெளியானது.
மதுரை மாவட்டம், சொக்கத் தேவன்பட்டியைச் சேர்ந்த கணேசன் (28), தேனி மாவட்டம், குமணன்தொழுவைச் சேர்ந்த குமார் ஆகியோரும் பனிச்சரிவில் சிக்கி இறந்திருக்கலாம் எனத் தகவல் வெளியானது. இதுகுறித்து தற்போது வரை அரசு மற்றும் ராணுவத்தரப்பில் இருந்து எந்த உறுதியான தகவலையும் தெரிவிக்கவில்லை. அதனால், இவர்களது பெற்றோர், உறவினர் கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர், உசிலம்பட்டி சொக்கத்தேவன்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் கணேசனை பற்றி, ராணுவத்தில் இருந்து மாவட்ட நிர்வாகத்துக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்றும், அவரை பற்றி தகவல் வந்துள்ளதா எனக் கேட்டு, தமிழக அரசுக்கு இ-மெயிலில் நேற்று விவரம் கேட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் வேளானூர் கிராமத்தைச் சேர்ந்த வர் ஹவில்தார் ஏழுமலை (37). இவ ரது மனைவி ஜமுனா ராணி. இவர் களுக்கு கவியரசன், பிரியதர் ஷன் என்ற 2 மகன்கள் உள்ள னர். பனிச் சரிவில் சிக்கி உயிரிழந் தவர்கள் தொடர்பாக டெல்லியில் இருந்து ராணுவ அதிகாரிகள் சிலர் ஜமுனா ராணியிடம் செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளனர்.
அதில், ‘‘பனிச்சரிவில் சிக்கி இருப்பவர்களைத் தேடும் பணி நடக்கிறது. அதனால், நம்பிக்கையு டன் இருங்கள்’’ என்று தெரிவித் துள்ளனர். இதனால், ஏழுமலை உயிருடன் இருப்பார் என்று அவரது குடும்பத்தினர் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ஏழுமலை குறித்த தகவலையும் அவரது புகைப் படத்தை அளிக்கவும் மறுத்து விட்டனர்.
பனிச் சரிவில் இறந்தவர்களில் கிருஷ்ணகிரி மாவட்டம் குடிசாதனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி(26) என்பவரும் ஒருவர் எனக் கூறப்படுகிறது. இவரது தந்தை நஞ்சேகவுடு. தாயார் பையம்மாள். ராமமூர்த்தி கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுனிதா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. உயிரிழந்த தக வல் அறிந்து அவரது மனைவி மற்றும் பெற்றோர் கதறி அழுதனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குநர் மணிவண்ணன், கூறும்போது: நேற்று இரவு வரை ராணுவ தலைமையகத்தில் இருந்து அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வரவில்லை என்றார்.