Published : 28 Jul 2021 03:16 AM
Last Updated : 28 Jul 2021 03:16 AM

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் எரிவாயு விநியோகத்துக்கான சிட்டிகேட் மையம், 25 சிஎன்ஜி நிலையங்கள் திறப்பு: முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்தார்

சென்னை

எண்ணூர் அருகில் உள்ள வல்லூரில் டோரன்ட் காஸ் நிறுவனம் அமைத்துள்ள எரிவாயு விநியோகத்துக்கான சிட்டிகேட் மையம் மற்றும் 25 சிஎன்ஜி விநியோக மையங்களை காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எண்ணூர் அருகில் உள்ள வல்லூரில் டோரன்ட் காஸ் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள சிட்டிகேட் நிலையம் மற்றும் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 25 சிஎன்ஜி நிலையங்கள் ஆகியவற்றை தலைமைச் செலகத்தில் இருந்தபடியே காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

டோரன்ட் காஸ் நிறுவனம் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் எரிவாயு விநியோக திட்டத்துக்காக ரூ.5000 கோடி முதலீடு செய்துள்ளது. இதன்மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தத் திட்டத்தின் முதல்கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் அருகில் உள்ள வல்லூரில் சிட்டிகேட் நிலையம் 1.4 ஏக்கரில் அந்நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலம் 33 லட்சத்துக்கும் மேலான வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 25 சிஎன்ஜி நிலையங்கள் அமைக்கப்பட்டு வாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளன. வல்லூரில் உள்ள சிட்டிகேட் நிலையத்தில் இருந்து இந்த 25 சிஎன்ஜி நிலையங்களுக்கு எரிவாயு கொண்டுவரப்பட்டு வாகனங்களுக்கு எரிவாயு விநியோகிக்கப்பட உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

டீசல் மற்றும் பெட்ரோலுக்கு மாற்றாக இது அமைவதுடன் சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கும். தற்போதுள்ள சிஎன்ஜி வாகனங்களுக்கும் இது உதவியாக இருக்கும்.

நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தொழில்துறை செயலர் நா.முருகானந்தம், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் பூஜா குல்கர்னி, டோரன்ட் காஸ் நிறுவன இயக்குநர் ஜீனல் மேத்தா, செயல் இயக்குநர் பிரகாஷ் சஜ்னானி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x