

சென்னை துறைமுகத்தின் சார்பில், கோயம்பேடு இந்தியன் வங்கி கிளையில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் நிரந்தர வைப்புக் கணக்கில் ரூ.100 கோடி செலுத்தப்பட்டது.
பணம் போடப்பட்ட 3 நாட்களுக்குப் பின்னர் கணேஷ் நடராஜன் என்பவர் சென்னை துறைமுகத்தின் துணை இயக்குநர் என்று அறிமுகம் செய்துகொண்டு, பல்வேறு ஆவணங்கள், சான்றிதழ்களை வங்கியில் தாக்கல் செய்து, அந்த ரூ.100 கோடியை இரு நடப்பு கணக்குகளுக்கு மாற்ற வேண்டும் என கூறியுள்ளார். வங்கி நிர்வாகமும் அவ்வாறு செய்துள்ளது.
பின்னர் அந்த நடப்பு கணக்குகளில் இருந்து பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டது. இதற்கு கோயம்பேடு இந்தியன் வங்கியின் மேலாளர் சேர்மதி ராஜா, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த தரகர் மணிமொழி ஆகியோர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலறிந்த துறைமுக அதிகாரிகள், வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். அப்போதுதான் அந்த பணம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.
அதற்குள் அந்த கும்பல் ரூ.45 கோடியை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றியது. இதுகுறித்து துறைமுக நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில், சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தது. பின்னர் இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இது தொடர்பாக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மணிமொழி வீடு, ஆயிரம்விளக்கில் ஒரு தனியார் அலுவலகம் உள்ளிட்ட 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை செய்தனர். இந்த சோதனையில், வழக்குத் தொடர்பாக சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.