

வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து மாநிலம் தழுவிய தொடர் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் வி.ரத்ன சபாபதி கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த அதிமுக ஆட்சியில் சமீபத்திய எவ்வித புள்ளி விவரங்கள் அடிப்படையும் இல்லாமல் வன்னியர் சமூகத்தினருக்கு சாதகமாக கொண்டு வரப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்துக்கு தற்போதைய திமுக அரசு அங்கீகாரம் வழங்கி, பின் தேதியிட்டு (கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதியிலிருந்து) அந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்தச் சொல்லி அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக ஆட்சியாளர்களாலும், 70 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்த ஆட்சியாளர்களாலும் கொங்கு வேளாளர், அனைத்து வேளாளர், அகமுடையார், கள்ளர், யாதவர், நாயுடு, நாடார், முதலியார், முத்தரையர், அனைத்து செட்டியார் உள்ளிட்ட இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீட்டில் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 1989-ம் ஆண்டு முதல் அதிமுக, திமுக அரசுகள் வன்னியர் என்ற ஒரே ஜாதிக்கு ஆதரவாக பல சட்டங்கள், அரசாணைகள் பிறப்பித்து வருகின்றனர். பிற 252 சமுதாயத்தினர் திட்டமிட்டு நிராகரிக்கப்படுகிறார்கள்.
விரைவில் செயல்திட்டம்
இவர்களது அரசியலமைப்பு சட்ட உரிமைகள் மறுக்கப்படுவதுடன், கேலிக்குரியவர்களாக நடத்துகின்றனர். இந்த அநீதிகளை எதிர்த்து விரைவில் செயல்திட்டங்களை அறிவிக்க உள்ளோம்.
வன்னியர் சமூகத்தினருக்கு மட்டும் 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை நாங்கள் எதிர்க்கிறோம். இதை எதிர்த்து மாநிலம் தழுவிய தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.